ரணிலுக்கு கிடைக்காது போன அதிகாரம் - அரசியலமைப்பால் சிக்கல்
அதிபர் தேர்தல் நடக்கும் என ஊடகங்களும் அரசியல் அவதானிகளும் கூறுவது முழுமையாக தவறானது.
அதிபர் ரணில் விக்ரமசிங்க முன்னர் இருந்த கோட்டாபய ராஜபக்சவின் எஞ்சிய இடைக்காலத்துக்கே பதவியில் இருக்க முடியுமே தவிர முன்னதாகவே தேர்தலை நடத்துவதற்கு உரிமை கிடையாது. இது அரசியலமைப்பில் தெளிவாக காணப்படுகிறது என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் கோரிக்கை தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போது இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசியலமைப்பில் மாற்றம்
“ஏனைய அதிபருக்கு இருக்கின்றது போல நான்கு வருடங்களுக்கு பின்னர் தேர்தலை நடாத்துவதற்கான அதிகாரம் இடைக்கால அதிபருக்கு கிடையாது.
தேர்தலை முன்னதாகவே நடத்த வேண்டுமாக இருந்தால் அரசியலமைப்பில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும். அதன் பின்னரையே தேர்தலை நடத்த முடியும்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல் என்பன நடாத்தப்பட வேண்டும். கடந்த காலங்களில் கட்டம் கட்டமாக படிப்படியாக தேர்தல் இடம்பெற்ற வரலாறுகள் உண்டு.
ஆளுநர்களின் அச்சுறுத்தல்
இந்த நிலையில் அரசாங்கம் பணம் இல்லை என காலத்தை இழுத்தடிக்காமல் கட்டம் கட்டமாக தேர்தலை நடத்த முன்வர வேண்டும்.
நாடளாவிய ரீதியில் ஆளுநர்களின் அதிகாரம், தலையீடுகள் அதிகரித்துள்ள நிலையில் வடக்கில் அது அச்சுறுத்தல் பாணியில் நகர்கின்ற நிலையே காணப்படுகின்றது.
வடக்கு ஆளுநர் அச்சுறுத்தும் பாணியில் செயற்பட்டால் நாம் சட்டரீதியாக செயற்படுவோம்” - என்றார்.
