இலங்கை மீண்டும் இரத்த வெள்ளமாகும் நிலை : முன்னாள் அதிபரின் எச்சரிக்கை
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் பதவி விலகலுக்குப் பின்னர் மக்கள் எதிர்பார்த்தது நிறைவேறவில்லை. ஊழல், மோசடி வஞ்சகர்கள் அதிகாரத்தில் உள்ளதால் மக்கள் கோபமாக இருக்கின்றார்கள்.
இதனால், அடுத்த அரகலய நிம்மதியாக இருக்காது. அது இரத்த வெள்ளமாக இருக்கும் என முன்னாள் அதிபர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க எச்சரித்துள்ளார்.
சிங்களத் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்த அவர், ஊழல், மோசடி நாட்டை பின்னுக்குத் தள்ளும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
தோல்விப் பயம்
மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் சப்பாத்தாக நான் இருந்திருந்தால்கூட பொதுத் தேர்தலுக்கு உத்தரவிட்டிருப்பேன். ஆனால், தோல்விப் பயம் காரணமாக ரணில் விக்ரமசிங்க தேர்தலுக்குச் செல்லவில்லை.

நாட்டின் வீழ்ச்சியை ரணில் விக்ரமசிங்கவால் விரைவாகத் தடுத்து நிறுத்த முடிந்தது. ஆனால், ஊழல் அரசியல்வாதிகளுடன் இணைந்து பணியாற்றியதால் அவரால் முன்னேற முடியவில்லை.
ஊழல் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே அரசில் உள்ளார்கள். ரணில் திருடுகின்றார் என்று நான் நினைக்கவில்லை. ஆனால், அவரைச் சுற்றியுள்ள அனைவரும் திருடுகின்றார்கள்.
சுகாதார அமைச்சில் ஊழல்
உதாரணமாக, சுகாதார அமைச்சரைப் பாருங்கள். அவரின் அமைச்சில் ஊழல், மோசடி இடம்பெற்றுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட தரமற்ற மருந்துகளால் மக்கள் இறந்துள்ளார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்.
அவரை அமைச்சுப் பதவியில் இருந்து மட்டுமல்லாமல், நாடாளுமன்றத்திலிருந்தும் அகற்ற வேண்டும்” - என்றார்.