உலகத் தமிழர்களிடம் இந்தோனேசியாவில் தவிக்கும் இலங்கை ஏதிலிகளின் உருக்கமான கோரிக்கை..!
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின்போது நாட்டைவிட்டு வெளியேறி, கடந்த 15 ஆண்டுகளாக இந்தோனேசியாவில் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் இலங்கை ஏதிலிகள் உலகவாழ் தழி்ழ் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தம்மையும் தமது பிள்ளைகளையும் அங்கிருந்து மீட்க உதவுமாறு உலகெங்கிலும் வாழும் தமிழர்களிடம் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தற்போது இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா மாகாணத்திலுள்ள மேடன் (Medan) பகுதியில் 75 குடும்பங்களையும் 38 தனிநபர்களையும் சேர்ந்த மொத்தம் 345 இலங்கை ஏதிலிகள் வசித்து வருகின்றனர்.
UNHCR அதிகாரிகள்
இவர்களில் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் 123 பேரும், பெண்கள் 99 பேரும், 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் 123 பேரும் அடங்குகின்றனர்.

கடந்த 15 ஆண்டுகளில் ஏதிலிகளாக வாழ்ந்து வந்தவர்களில் 16 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தம்முடன் இந்தோனேசியாவுக்கு வந்த ஏனைய நாடுகளைச் சேர்ந்த ஏதிலிகள், ஐக்கிய நாடுகள் ஏதிலிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் (UNHCR) ஊடாக மூன்றாம் நாடுகளில் மீள்குடியேற்றப்பட்டுள்ள போதிலும், 2014ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கை ஏதிலிகளுக்கு எவ்வித மீள்குடியேற்ற வாய்ப்புகளும் வழங்கப்படவில்லை என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கடந்த நவம்பர் 19ஆம் திகதி இலங்கை ஏதிலிகளைச் சந்தித்த UNHCR அதிகாரிகள், இனிமேல் மீள்குடியேற்றத்திற்கான மாற்று வழிகள் எதுவும் இல்லை எனத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
மத்திய அரச அதிகாரிகள்
விரும்பும் வரை இந்தோனேசியாவில் தங்கியிருக்கலாம் அல்லது சொந்த நிதியுதவியின் மூலம் மூன்றாம் நாடொன்றுக்குச் செல்ல முயற்சிக்கலாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியதாகவும் ஏதிலிகள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் எழுத்துப்பூர்வமான விளக்கமொன்றைக் கோரியபோதும், அதிகாரிகள் அதனை வழங்க மறுத்துவிட்டதாக அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், தமக்கான நிரந்தரத் தீர்வை வலியுறுத்தித் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வரும் ஏதிலிகள், கடந்த வெள்ளிக்கிழமை (20) மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது, வடக்கு சுமத்ரா மாகாண ஆளுநர் முஹம்மது பொபி அஃபிஃப் நசுஷனிடம் (Muhammad Bobby Afif Nasution) மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்.
இந்தோனேசிய அரசாங்கம் வழங்கி வரும் மனிதாபிமான உதவிகளுக்கு நன்றி தெரிவித்துள்ள ஏதிலிகள், மத்திய அரச அதிகாரிகளும் UNHCR பிரதிநிதிகளும் தம்முடன் பேச்சுவார்த்தை நடத்தி, மூன்றாம் நாடுகளுக்குச் செல்வதற்கான சட்டபூர்வமான வழிமுறைகளைத் தெளிவுபடுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன், தமக்கான நிரந்தரத் தீர்வைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறும், தமிழ் அரசியல் தலைவர்கள் மற்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் தமது நிலைமையை சர்வதேச அளவில் எடுத்துரைத்துத் தமக்காகக் குரல் கொடுக்க வேண்டும் எனவும் அவர்கள் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |