சட்டவிரோதமாக பிரான்ஸ்சிற்கு செல்வதற்கு முயற்சித்த ஈழத் தமிழர் உயிரிழப்பு!
இலங்கையில் இருந்து ஐரோப்பிய நாடான பிரான்ஸ்சிற்கு செல்வதற்கு முயற்சித்த ஈழத் தமிழர் ஒருவர் உயிரிழந்த துன்பியல் சம்பவம் பதிவாகியுள்ளது.
தமிழர் தாயகப் பகுதிகளில் இருந்து மேற்குலக ஐரோப்பிய நாடுகளுக்கு சட்டவிரோதமாக செல்லும் மோகம் காரணமாக உயிரை பறிகொடுக்கும் துன்பியல் சம்பவங்கள் பதிவாகிவருகின்றன.
அந்த வகையில் பிரான்ஸ்சிற்கு செல்லும் நோக்குடன் முகவர் ஒருவரை நம்பி, விமானம் மூலம் ரஷ்யா சென்று அங்கிருந்து பெலரஸ், போலந்து ஊடாக பிரான்ஸ் செல்ல முயற்சித்த வட பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஐந்து பிள்ளைகளின் தந்தை
கிளிநொச்சி வட்டக்கச்சி மாயவனூர் பகுதியைச் சேர்ந்த பாலசிங்கம் யுகதீபன் என்ற நாற்பது வயது மதிக்கதக்க ஐந்து பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்த நிலையில், பெலரஸ் இராணுவத்தினரால் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சுமார் 700 கிலோ மீற்றர் தூரத்தை நடந்து கடப்பதற்காக ஏழு பேர் கொண்ட குழுவுடன் சென்ற பாலசிங்கம் யுகதீபன், உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், ஏனையவர்கள் அவரை கைவிட்டு சென்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கடந்த 7 ஆம் திகதி சனிக்கிழமை பெலரஸ் எல்லையில் இருந்து சில கிலோ மீற்றர்கள் தொலைவில் உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் வட்டக்கச்சியில் உள்ள மனைவியை பாலசிங்கம் யுகதீபன் தொடர்புகொண்டுள்ளார்.
தம்மால் நடக்க முடியாதுள்ளதாகவும் தம்மை யாரேனும் காப்பாற்ற தவறினால் உயிர்தப்ப வழியில்லாமல் போகும் என தெரிவித்தார் எனவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையிலேயே பாலசிங்கம் யுகதீபன், உயிரிழந்துள்ளமை தற்போது தெரியவந்துள்ளதாக அவரது உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.