குடும்பத்தாருடன் உரையாடிய மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன்
சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன் சிவராசா, தனது குடும்பத்தாருடன் நேற்று தொலைபேசியில் உரையாடியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இந்த உரையாடலின் போது, தன்னை சாதாரண கைதிகள் தடுத்து வைத்திருக்கும் சிறையில் இருந்து சிறப்பு சிறைக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக அனோஜன் கூறியுள்ளார்.
எனினும், இந்தத் தண்டனை குறித்த அடுத்தக்கட்டம் தொடர்பாக எந்தத் தகவலும் தனக்கு அறிவிக்கப்படவில்லை எனவும் அனோஜன் தெரிவித்ததாக குடும்ப உறுப்பினர் ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
பொதுமன்னிப்பு
இதனிடையே, அனோஜனின் நலனை உறுதிசெய்ய, இராஜதந்திர ரீதியாக தங்களால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

அதேபோன்று, சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜனுக்கு மனிதாபிமான அடிப்படையில் மன்னிப்பு வழங்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆட்சேபகரமான சமூக ஊடகக் கருத்து ஒன்றின் காரணமாக தண்டனை விதிக்கப்பட்ட, இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சிவராசவுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு முன்னாள் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி வலியுறுத்தியுள்ளார்.
ஐந்தாண்டு சிறைத் தண்டனை மரண தண்டனையாக அதிகரிக்கப்பட்டதாக வெளியான செய்திகளை தொடர்ந்து அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
மன்னரிடம் அவசர வேண்டுகோள்
சவுதி அரேபியாவில் இலங்கை இளைஞன் அனோஜன் சிவராசாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி இலங்கை முஸ்லிம் சமூகத்தினரிடையே கவலையினை ஏற்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஒன்றிணைத்து, அனோஜன் சிவராசா தொடர்பில் ஜனாதிபதியிடமும் சவுதி அரேபிய மன்னரிடமும் அவசர வேண்டுகோளை முன்வைப்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
மேலும் சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கல்முனை, நட்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜன் எனும் இலங்கை இளைஞரை உயிருடன் மீட்டுத் தருமாறு அவரது தாயார் கண்ணீர்மல்க உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |