இலங்கை அணியின் தோல்விக்கு அமைச்சரின் தலையீடே காரணம் : அம்பலப்படுத்திய சம்மி சில்வா
சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இலங்கை கிரிக்கெட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கும், இலங்கை கிரிக்கெட் அணி உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரிலிருந்து வெளியேறியறிமைக்கும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் தலையீடே காரணம் என இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் சம்மி சில்வா பகிரங்கப்படுத்தியுள்ளார்.
சர்வதேச கிரிக்கட் பேரவையினால் இலங்கை கிரிக்கெட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபையில் இன்று(11) இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வெளியேற்றப்பட்ட முக்கிய வீரர்கள்
அவர் மேலும் தெரிவிக்கையில், சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இலங்கை கிரிக்கெட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு பிரதான காரணம் விளையாட்டுத்துறை அமைச்சரின் தலையீடு ஆகும்.
அவரே இம்முறை உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி வீரர்களை தெரிவு செய்தார்.
நாங்கள் தெரிவு செய்த பட்டியலில் இருந்து துஷ்மந்த சமீரா மற்றும் வனிந்து ஹசரங்க ஆகிய இருவரும் இறுதி வீரர்களாக இருந்தனர். ஆனால் அவர்கள் இருவரையும் நீக்கிவிட்டு அவர் புதிய பெயர் பட்டியலை தயார் செய்தார்.
இவரின் தலையீட்டால் பல முக்கிய வீரர்கள் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதுவும் இலங்கை அணி தோல்விக்கு ஒரு காரணம்.
அடுத்த கட்ட நடவடிக்கை
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் இந்த தீர்மானம் எமக்கு கவலையை தருகிறது.
இது குறித்து கலந்துரையாட எதிர்வரும் 21 ஆம் திகதி நான் சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு செல்லவுள்ளேன். அந்தக் கலந்துரையாடலின் பின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்போம்” - என்றார்.