சர்வதேச அளவில் பேசப்பட்ட மஹிந்த ஆட்சியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு- நீதிமன்றின் உத்தரவு!
ஸ்ரீலங்கா இராணுவத்தினர் மீதான பாரதூர வழக்குகளில் ஒன்றான ரத்துபஸ்வல துப்பாக்கிச் சூடு தொடர்பிலான வழக்கு விசாரணை எதிர்வரும் ஜுன் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2013ஆம் ஆண்டு இராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பிலான விசாரணை இன்றைய தினமும் கம்பஹா நீதிமன்றில் நடைபெற்றது.
தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ச அரச தலைவராகவும், தற்போதைய அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராக பதவிவகித்த 2013ஆம் ஆண்டில், கம்பஹா ரத்துபஸ்வல பிரதேசத்தில் ஏற்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் பேசப்பட்டுள்ளது. ரத்துபஸ்வல பிரதேசத்திலுள்ள இறப்பர் பொருட்கள் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் கழிவுகள் குடிநீரில் கலப்பதற்கு எதிராகவும், சுத்தமான குடிநீரை வழங்கும்படியும் கோரி நூற்றுக்கணக்கான மக்கள் வீதிப் போராட்டத்தை 2013ஆம் ஆண்டு ஓகஸட் மாதம் முதலாம் திகதி முன்னெடுத்திருந்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தைக் கலைப்பதற்காக அங்கு விசேட அதிரடிப்படை குவிக்கப்பட்டதோடு காவல்துறையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அதன்போது இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் பலியானதுடன், பலர் படுகாயமடைந்திருந்தனர்.
கம்பஹா மேல் நீதிமன்றத்தில் மூவரடங்கிய நீதிபதிகள் தலைமையில் இதுகுறித்த வழக்கு விசாரணை இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது.
வழக்கு விசாரணை தொடர்ச்சியாக நடத்தப்பட வேண்டியிருப்பதால் எதிர்வரும் ஜுன் மாதம் 11ஆம் திகதிவரை விசாரணைகளை ஒத்திவைப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.