நாட்டில் அதிவேகமாக பரவும் கொரோனா- எடுக்கப்படவுள்ள கடும் நடவடிக்கை!
நாட்டில் அதிவேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கில் விதிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில், விதிமுறைகளை மீறுவோர்களை கண்டறிந்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையினை மேற்கொள்வதற்காக இன்று திங்கட்கிழமை விசேட பொலிஸ் சோதனை நடவடிக்கையொன்று மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாரசிங்கவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டவில் மட்டக்களப்பு நகர் பகுதிகளில் குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி பீ.கே.ஹெட்டியாராச்சி தலைமையில் சுகாதார துறையினரின் ஒத்துழைப்புடன் இடம்பெற்ற சுற்றிவளைப்பின் போது சுகாதார விதிமுறைகளை உரிய முறையில் கடைப்பிடிக்காத 75 இற்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் எச்சரிக்கை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதில் எட்டுப்பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், மாவட்டத்தின் நகர் பகுதிகளில் அதிக சன நடமாட்டம் நிலவும் பகுதிகளில் கிருமி தொற்று நீக்கி விசுறும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.








