இலங்கை சீன கொலனியாக உருவாகும் ஆபத்து - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்கு ஆட்சிக்கு வருபவர்களுக்கு பல நூற்றாண்டுகளாக நாட்டில் உள்ள நிலங்களை பல்வேறு குழுக்களிடம் ஒப்படைக்க எவ்வித உரிமையும் கிடையாது என்று வண ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
சில கட்சிகள் பல்வேறு உத்திகள் மூலம் நாட்டைக் கைப்பற்ற முயற்சிப்பதாகவும் அவர் கூறினார்.
“நாங்கள் 30 ஆண்டுகளாக கடுமையான துயரத்தை எதிர்கொண்டோம். அது ஆயுதப் பலத்தால் நாட்டின் ஒரு பகுதியைக் கைப்பற்ற பிரிவினைவாத பிரிவுகளால் மேற்கொள்ளப்பட்ட போராட்டமாகும். இப்போது நாம் இன்னொரு சிக்கலை எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளது.
இது நாட்டின் சில பகுதிகளை மற்ற உத்திகள் மூலம் கைப்பற்றும் முயற்சி. நவீன சீன கொலனி. இந்த நாடு வேறொரு நாட்டின் மாகாணம் என்பது மிகவும் தெளிவாக உள்ளது. அது உருவாகப்போகிறது. 1115 ஏக்கர் நிலம் நாட்டின் கட்டுப்பாட்டில் இல்லை. அந்த நிலத்தில் இலங்கையின் பிரதிநிதித்துவம் இல்லை.
எனவே, நாடாளுமன்றத்தில் சட்டமன்றத்திற்கு பொறுப்பான இடத்தில் அமர்ந்திருக்கும் பொறுப்புள்ள பிரதிநிதிகள் இந்த நிலைமை குறித்து அறிந்திருக்கிறார்களா என்று நாங்கள் கேட்கிறோம். இது புதிய ஆண்டில் எடுக்கப்பட வேண்டிய புதிய முடிவு.
உருவாக்கப்படவுள்ள புதிய சீன கொலனி நிராகரிக்கப்பட வேண்டும். இது இந்த நாட்டில் நிறுவப்படக்கூடாது, ”என்று அவர் மேலும் தெரிவித்தார்.