இலங்கையிடம் போதுமான நிதி வசதி இல்லை : பந்துல குணவர்தன பகிரங்கம்
நாட்டில் ஏற்படும் இயற்கை அனர்த்தங்கள் அல்லது வெளிநாடுகளில் ஏற்படும் அதிர்ச்சிகரமான சூழ்நிலைகளை எதிர்கொள்வதற்குப் போதுமான நிதி வசதி இலங்கையிடம் இல்லை என முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardane) தெரிவித்துள்ளார்.
ஹோமாகம பகுதியில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும், நாட்டை முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான ரூபாயோ அல்லது வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதற்குத் தேவையான டொலர்களோ எம்மிடம் இல்லை.
இயற்கை அனர்த்தங்கள்
அரசாங்கத்தின் இந்த வருட வருமானம் 5.3 டிரில்லியன் ரூபாயாகவும் அரசாங்கத்தின் மீளெழும் செலவினம் 5.6 டிரில்லியன் ரூபாயாகவும் உள்ளது.
அதற்கமைய, அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு 300 முதல் 400 பில்லியன் ரூபாய் வரை பற்றாக்குறை நிலவுகின்றது.

நாட்டில் மண்சரிவுகள், சூறாவளி போன்ற உள்ளகத் தாக்கங்கள் ஏற்பட்டாலும் அல்லது வெளிநாடுகளில் ஏற்படும் யுத்தம் போன்ற வெளிப்புறத் தாக்கங்கள் ஏற்பட்டாலும், அத்தகைய அதிர்வுகளை எதிர்கொள்வதற்குத் தேவையான வலுவான பொருளாதார நிதி நிலைமை எமது நாட்டில் இல்லை.
இந்தநிலையில் நாட்டில் நிலவும் அடிப்படைப் பிரச்சினை ரூபாய் மற்றும் டொலர் இல்லாததே ஆகும்” என பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |