மீண்டும் நாட்டில் துயர சம்பவங்கள் நிகழாது தடுக்க மறுசீரமைக்கப்பட்டுள்ள புலனாய்வுத்துறை!
ஸ்ரீலங்காவில் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு போன்ற துயர சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க புலனாய்வுத்துறையை மறுசீரமைத்துள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
சமூகத்திற்குள் இதுபோன்ற தீங்கு விளைவிக்கும் போதனைகளைத் தடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அத்தனகல்ல ராஜமஹா விகாரையில் இடம்பெற்ற சமய வழிபாடுகளின் பின்னர் அவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
புலனாய்வு சேவைகள் நன்கு பயிற்றுவிக்கப்பட்டவையாகவும் தொழிற் தகமை கொண்டதாக அமைந்த போதிலும் திறம்பட இயங்குவதற்கான சூழல் இன்மை காரணமாக அவர்களின் செயற்பாடுகள் முடக்க நிலைக்குச் சென்றன. நாம் அந்த தவறை மீண்டும் செய்யாது எமது புலனாய்வு சேவைகள் சிறப்பாக செயல்படுவதற்கு வழிவகுத்துள்ளோம்.
உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு போன்ற துயர சம்பவங்கள் மீண்டும் நிகழாது தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமூகத்திற்குள் தீங்கு விளைவிக்கும் போதனைகளைத் தடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளார். அதேவேளை, ஸ்ரீலங்காவில் போதைப்பொருள் கடத்தல் முயற்சிகளை முறியடிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் பாதுகாப்பு செயலாளர் பதிலளித்தார்.
பாதுகாப்பு மிக்க பூச சிறைச்சாலையில் போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபடும் பிரதான நபர்களை கண்காணிப்பின் கீழ் வைத்திருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டமையினால் அவர்களின் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல் முயற்சிகள் பெருமளவில் முடங்கியுள்ளன. அண்டை நாடுகளுடன் ஏற்படுத்தப்பட்டுள்ள விசேட பொறிமுறையின் மூலம் போதைப் பொருள் கடத்தல் காரர்களின் துணை அமைப்பும் செயற்பட முடியாது உள்ளது.
எனவே, போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மீது முப்படைகள், காவல்துறையினர், உளவுத்துறை சேவைகள் மற்றும் அண்டை நாடுகளின் ஒத்துழைப்புடன் அவர்களை சுற்றி ஒரு பெரிய அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு நீண்ட செயல்முறை என்பதால் குறுகிய காலத்தில் முடிவுகள் குறிப்பிடத்தக்கவையாக அமையாத போதிலும் எதிர்காலத்தில் வெற்றியை எங்களால் காண முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.