பிரிட்டன் வைரஸ் இலங்கையில் எவ்வாறு பரவியது - வெளிவந்தது தகவல்
இலங்கையின் பல பகுதிகளுக்கும் பயோ பபிள் மூலம் நடமாட அனுமதிக்கப்பட்ட உக்ரைன் சுற்றுலாப்பயணிகள் மூலமே பிரிட்டன் வைரஸ் நாட்டில் பரவியது என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் நாடாளுமன்றில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது கொரோனாவைரஸ் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று சுகாதார அமைச்சர் பவித்திராவன்னியாராச்சியும் எதிர்க்கட்சி தலைவர் சஜித்பிரேமதாசவும் கடும் விவாதத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சி தலைவர் சஜித்பிரேமதா கொரோனா வைரசினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மீதான கட்டுப்பாட்டினை அரசாங்கம் இழந்துவிட்டது என குறிப்பிட்டார்.
சுற்றுலா பயணிகளை சுதந்திரமாக பயோ பபிளுக்கு மத்தியில் நடமாட அனுமதித்துள்ளமை கவலையளிக்கின்றது என தெரிவித்தார். போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக வைரஸ் பரவுகின்றது என தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் தனிமைப்படுத்தல் உத்தரவுகளை நீக்கியமையும் இதற்கு காரணம் எனவும் குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த சுகாதார அமைச்சர் அரசாங்கத்தின் கொரோனா வைரசினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எதிர்க்கட்சி தலைவர் குழப்ப முயல்கின்றார் என தெரிவித்தார்.