ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியிலிருந்து பிரிந்து மே தினத்தை கொண்டாடவுள்ள முன்னாள் அரச தலைவர் தலைமையிலான கட்சி!
ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியிலிருந்து பிரிந்து தனித்து மே தினத்தை கொண்டாடுவதற்கு முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.
இதுகுறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பை கட்சியின் பொது செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர நேற்று இரவு ஊடகங்களுக்கு வெளியிட்டார். இதன் ஊடாக அரச தலைவர் கோட்டாபயவின் அரசாங்கத்தின் பங்காளிக்கட்சிகளிடையே உள்ள பிளவுநிலை அம்பலமாகியிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தயாசிறி ஜெயசேகர தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
நாங்கள் சாதாரண சம்பிரதாயமாக ஒவ்வொரு முறையும் தனித்தே மே தினத்தைக் கொண்டாடிவருகின்றோம். அந்த வகையிலேயே இம்முறையும் தனித்து மே தினத்தை கொண்டாட முடிவெடுத்துள்ளளோம். இந்த மே தினக் கொண்டாட்டத்திற்கு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும், அரசாங்கத்திற்கும் அழைப்பு விடுத்திருக்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.
அனைவருக்கும் தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுவதற்கான உரிமையிருக்கின்றது. அதற்கமையவே இந்த தீர்மானத்தை எடுத்தோம். எமது கட்சிக்கு கீழ் உள்ள தொழிற்சங்கங்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த தீர்மானத்தை எடுத்தோம்.
கொழும்பு போர்ட் சிட்டி ஆணைக்குழு விவகாரம் பற்றி நீதிமன்ற விசாரணை இடம்பெறுகின்றது. ஆகவே நாடாளுமன்றத்தில் இதுபற்றி பேசப்படுகையில் நாங்கள் எமது கருத்தை வெளியிடுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.