கோட்டாபய-மஹிந்த கூட்டணியிலிருந்து விலகும் மைத்திரி? உயர்மட்டங்களுடன் மந்திராலோசனை!
சிறிலங்கா அரசாங்கத்தின் செயற்பாடுகளால் அதிருப்தியடைந்துள்ள சிறிலங்கா சுதந்திரக்கட்சி, கோட்டாபய(Gotabaya) - மஹிந்த(Mahinda) அரசாங்கத்திற்கு அளித்துவரும் ஆதரவை விலக்கி எதிர்க்கட்சி வரிசையில் அமர்வதற்கு ஆலோசனை நடத்திவருகிறது.
இதன் காரணமாக தென்னிலங்கை அரசியல் களம் பெரும் பரபரப்பை சந்தித்துள்ள நிலையில் நாளைய தினம் நாடாளுமன்ற அமர்வும் நடைபெறவுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் தனித்து களமிறங்க தீர்மானித்துள்ள சிறிலங்கா சுதந்திரக்கட்சி, இனிவரும் எந்த தேர்தல்களிலும் பொதுஜன முன்னணியுடன் கூட்டுவைப்பதில்லையென்றும் முடிவுசெய்துள்ளது.
விவசாயிகளின் உரப் பிரச்சினை, அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு உட்பட்ட பல்வேறு பிரச்சினைகளை பகிரங்கமாக பேச வேண்டுமெனில் எதிர்க்கட்சி தரப்பில் இருக்கவேண்டு மெனவும் அதனால் அரசிலிருந்து வெளியேறி எதிர்க்கட்சி வரிசையில் அமர சுதந்திரக்கட்சி மேல் மட்டத்தில் மந்திராலோசனைகள் நடத்தப்படுவதாகவும் அக்கட்சியின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும் அரசிலிருந்து வெளியேறுவதாயின் இந்த ஆட்சியின் இறுதி வருடத்தில் வெளியேறவேண்டுமெனவும், முன்கூட்டி வெளியேறினால் அது அரசியல் ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்துமெனவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் கட்சித் தலைமையிடம் தெரிவித்துள்ளதாக அறியமுடிகின்றது.
இருப்பினும் நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து விசேட அறிவிப்பை சுதந்திரக்கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேன(Maithribala Sirisena) விரைவில் வெளியிடுவார் என்றும் சுதந்திரக் கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை அடுத்துவரும் தேர்தல்களில் மொட்டு சின்னத்தைக் கைவிட்டு வெற்றிலை சின்னத்திலேயே போட்டியிடவும் சுதந்திரக்கட்சி தீர்மானித்திருப்பதாகவும் கூறப்படுகின்றது.