நாட்டை முழு அளவில் முடக்குவது தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள கருத்து!
நாட்டை முழு அளவில் முடக்குவதற்கு விரும்பவில்லை என ஸ்ரீலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. எவ்வாறெனினும், நாட்டை முழுமையாக முடக்க வேண்டுமென அதிகாரிகள் பரிந்துரை செய்தால் அதனை அமுல்படுத்த முடியும் என அமைச்சர் மஹிந்த அமரவீர நாடாளுமன்றில் இன்று தெரிவித்துள்ளார்.
நாட்டை முழுமையாக முடக்குமாறு பலர் கோரி வருகின்ற போதிலும் கடந்த காலங்களில் நாடு முழுமையாக முடக்கப்பட்ட போது ஏற்பட்ட அசௌகரியங்களை நினைத்துப் பார்க்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டை முழுமையாக முடக்கினால் மக்கள் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலைமை உருவாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வர்த்தக நடவடிக்கைகளும் பாரியளவில் பாதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேவை ஏற்பட்டால் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனை வழிகாட்டல்களின் அடிப்படையில் முழு அளவிலான முடக்க நிலைமை அமுல்ப்படுத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டை முடக்குவது மிகவும் இலகுவானது என்ற போதிலும் அதனால் ஏற்படும் பாதிப்புக்கள் பாரதூரமானது என அமைச்சர் அமரவீர தெரிவித்துள்ளார்.