இலங்கை அரசின் இனவெறி அடக்குமுறை! குவின்ஸ்லாந்து புலம்பெயர் அமைப்பு கண்டனம்
யாழ்.பல்கலைக்கழக தூபியை இடித்து தமது உச்சக்கட்ட இனவெறியையும் அடக்குமுறையையும் இலங்கை அரசு வெளிப்படுத்தி நிற்கின்றது என்று குவின்ஸ்லாந்து புலம்பெயர் அமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடித்தழிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் குவின்ஸ்லாந்து புலம்பெயர் அமைப்பு வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தினுள் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை அகற்றுவதானது தமிழர்களை சீண்டும் செயல் என்பதை விட முழு நாட்டுக்கும் ஏற்பட்ட அவமானம் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
முள்ளிவாய்கால் வரை படுகொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் இலட்சக்கணக்கான தமிழ் மக்களின் நினைவாக அமைக்கப்பட்ட தூபியானது தமது உறவகளின் நினைவாக வணக்கம் செலுத்தி ஆறுதல் அடைவதற்கு பெரிதும் உதவியாக இருந்துள்ளது.
இவற்றை தமிழ் மக்களின் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் இலங்கை அரசநியமணம் பெற்ற ஒரு சில பல்கலைக்கழக அதிகாரிகளின் துணைடுன் இரவோடு இரவாக இடித்தழிப்பதானது தமிழர் பல்கலைக்கழகத்தின் சுயாதீனத்திற்கும் ஜனநாயகத்திற்கும் விழுந்துள்ள அடியாகவே பார்க்க வேண்டியுள்ளதுடன் எதிர்வரும் காலங்களில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலையும் ஆட்சியாளர்கள் தடைசெய்வார்கள் என்ற அச்சமும் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. 2009ஆம் ஆண்டு தமிழர்களின் இராணுவ பலத்தை தோற்கடித்து தாம் வெற்றி கொண்டதாக எண்ணிய சிங்கள தேசம் தமிழர் தாயகப்பகுதிகளில் வெற்றிச் சின்னங்களை பொறித்து தூபிகளை அமைத்துவந்துள்ளது.
அவ்வாறான செயலின் மூலம் தமிழர்கள் தோற்கடிக்கப்பட்ட இனம் என்பதையும் தமிழர் தாயகம் தோற்கடிக்கப்பட்டு தம்மால் மேலாண்மை செய்யப்படும் தேசம் என்பதை சிங்கள ஆட்சியாளர்களே நிரூபித்துள்ளனர். தமிழர் தம் உறவுகளுக்காக தமது பகுதிகளில் தூபிகள் அமைப்பதையும் அவர்களை நினைவு கூர்வதையும் ஆட்சியாளர்கள் தொடர்ச்சியாக தடுத்து வந்துள்ளனர்.
இந்நிலையில் யாழ்.பல்கலைக்கழக தூபியை இடித்து தமது உச்சக்கட்ட இனவெறியையும் அடக்குமுறையையும் இலங்கை அரசு வெளிப்படுத்தி நிற்கின்றது.
போரில் கொல்லப்பட்ட தம்மின மக்களை அந்த இன குழுமம் நினைவு கூறுவதற்கான அங்கிகாரமும் உரிமையும் ஐக்கிய நாடுகள் சபை ஸ்தாபனத்திலும் இலங்கை அரசியல் அமைப்பிலும் உள்ளது. அவற்றை பிரதிபலிக்கும் வகையில் ஜேவிபி சின்னங்கள் தூபிகள் அமைந்ததை யாவரும் அறிவர்.
இவ்வாறான போதும் போரில் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்காக அமைக்கப்பட்ட யாழ். பல்கலைக்கழக நினைவுத்தூபியை அழித்தமைக்கு எமது பலத்த கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.