இறக்குமதி என்ற பெயரில் மோசடிகளில் ஈடுபடும் அரசாங்கம்! எதிர்க்கட்சி பகிரங்க குற்றச்சாட்டு
அடுத்த மூன்று மாதங்களில் இறக்குமதி செய்யப்பட்வுள்ள 2 இலட்சம் மெட்ரிக் தொன் சீனி மூலம் அரசாங்கத்திற்கு நெருக்கமானவர்களுக்கு 990 கோடி ரூபா வருமானம் கிடைக்கவுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
சீனிக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால் அரசாங்கத்திற்கோ அல்லது நாட்டு மக்களுக்கோ எவ்வித பயனும் கிடைக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில். 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
201 இற்கு முன்னர் குறிப்பிட்டவொரு நிறுவனத்திற்கு மாத்திரம் நுரைச்சோலை அனல்மின் உற்பத்தி நிலையத்திற்கு நிலக்கரி விநியோகத்திற்கு அனுமதியளிக்கப்பட்டிருந்தது.
இதன் போது இடம்பெற்ற மோசடிகளைப் போன்று தற்போதும் மோசடிகள் ஆரம்பமாகியுள்ளன. இவ்வாறான செயற்பாடுகளின் காரணமாகவே மின்சாரத்துறை பாரிய வீழ்ச்சியடைந்து நஷ்டத்தில் சென்று கொண்டிருக்கிறது.
இதே போன்று தான் அண்மையில் சீனி இறக்குமதி வரி குறைப்பில் பாரிய மோசடிகள் இடம்பெற்றன. ஆனால் இதன் காரணமாக அரசாங்கத்திற்கு 11 400 கோடி ரூபாய் வருமானம் அற்று போயுள்ளதோடு மக்களுக்கும் எவ்வித பயனும் கிடைக்கவில்லை.