கடும் விரக்தியில் பங்காளிக் கட்சிகள்! நாளை மஹிந்தவை சந்திக்கும் முக்கிய புள்ளிகள் - பின்னணி என்ன?
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பதினொரு கட்சிகளின் தலைவர்கள் நாளைய தினம் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்திக்கவுள்ளனர்.
அரசாங்கத்தை மீண்டும் உரிய பாதையில் கொண்டு வரும் வகையில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் கொழும்பு- டார்லி வீதியில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இந்தக்கட்சிகளின் தலைவர்கள் சந்தித்து பிரச்சனைகள் குறித்து விவாதித்தனர்.
அரசாங்கத்துக்குள் இருந்து போராடும் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களான உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் அடங்குகின்றனர்.
வழக்கமான அரசாங்க செய்தி மாநாடுகளில் அரசாங்கக் கொள்கையை வெளிப்படுத்தும் கம்மன்பில, ஜனாதிபதி கோட்டாபயவுக்கு வாக்களித்த 6.9 மில்லியன் வாக்காளர்களிடையே விரக்தியும் ஏமாற்றமும் ஏற்பட்டுள்ளதாக முறையிட்டு வருகிறார்.
தாம் அரசாங்கத்திற்குள் போராட வேண்டிய கடமை உள்ளதாக அவர் ஆங்கில செய்தித்தாள் ஒன்றிடம் கூறியுள்ளார்;. 20வது அரசியலமைப்புக்கு நாடாளுமன்றத்தில் ஆதரவாக வாக்களித்த உதய கம்மன்பில தற்போது 20 ஆவது திருத்தத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.
ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் உறுதிமொழி வழங்கப்பட்ட ஒரு நாடு-ஒரு சட்டம் என்ற முழக்கத்தை செயல்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அதேநேரம் வாழ்க்கை செலவை கட்டுப்படுத்துவதற்காக சந்தை சக்திகளைக் கட்டுப்படுத்த அரசாங்கம் நேரடியாக தலையிட வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.
இந்தநிலையில் கம்மன்பிலவின் இந்தக்கருத்துக்கள் ஆளும் கட்சிக்குள் முரண்பாடுகள் உள்ளமையை எடுத்துக்காட்டுகின்றன.