கிழக்கு மாகாண சமூக மக்களின் தேர்தல் விஞ்ஞாபனம் ஜனாதிபதியிடம் கையளிப்பு
கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை (Trincomalee), மட்டக்களப்பு (Batticaloa) மற்றும் அம்பாறை (Ambara) ஆகிய மாவட்டங்களில் வாழும் அனைத்து சமூகப் பிரஜைகளை மையப்படுத்திய தேர்தல் விஞ்ஞாபனம் ஜனாதிபதியிடமும் ஏனைய சமகால அரசியல்வாதிகளிடமும் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வானது ஞாயிற்றுகிழமை (08) பாசிக்குடா விடுதியில் வைத்து இடம்பெற்றுள்ளது.
கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தினுடைய “உள்ளடக்கிய ஆட்சிக்கான குடிமக்களின் குரல் மற்றும் முன்முயற்சி” திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த சிவில் சமூக மக்களின் வேணவாக்கள் அடங்கிய தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஆங்கில மற்றும் தமிழ் பிரதிகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் (Ranil Wickramasinghe) கையளிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் விஞ்ஞாபனம்
அதேவேளை அதன் பிரதிகள், அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா, வடமேல் மாகாண ஆளுநர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட், நாடாளுமன்ற உறுப்பினர்களான ஏ.எல்.எம். அதாவுல்லாஹ், எஸ்.எம்.எம். முஸர்ரப் மற்றும் கோவிந்தன் கருணாகரரன் ஆகியோரிடமும் கிழக்கு மாகாண சமூக மக்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் பிரதிகள் கையளிக்கப்பட்டன.
அத்தோடு, கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எம்.எல்.எம். புஹாரி முஹம்மத் தலைமையில் திட்ட முகாமையாளர் பேரம்பலம் றேணுகா சிவில் சமூக அமைப்புக்களின் செயற்பாட்டாளர்களான கே. ஆறுமுகம் அசோக்கா, சைமன் வாணி மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளரும் சமூக ஆய்வு ஊடகவியலாளருமான ஏ.எச்.ஏ.ஹஸைன் ஆகியோர் கிழக்கு சமூக மக்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தைக் கையளித்தனர்.
மேலும், கிழக்கு சமூகத்தால் அடையாளப்படுத்தப்பட்ட பரிந்துரைகள், எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிடவுள்ள அரசியல் கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் உள்வாங்கப்பட வேண்டுமென எதிர்பார்க்கப்படுவதாக கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எம்.எல்.எம். புஹாரி முஹம்மத் ஜனாதிபதியிடம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.