சூட்சுமமான முறையில் கொள்ளையில் ஈடுபட்டு வந்தவர்களைக் கைது செய்த காவல்துறையினர்!
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல இடங்களிலும் மிகவும் சூட்சுமமான முறையில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவர்களையும் கொள்ளையிடப்பட்ட சில பொருட்களையும் களுவாஞ்சிகுடி காவல்துறையினர் நேற்று (05) கைது செய்து கைப்பற்றியுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, களுவாஞ்சிகுடிஇவெல்லாவெளி, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு உள்ளிட்ட பல காவல்துறை பிரிவுகளிலும் அண்மைக்காலமாக கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெறுவதாக மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்நிலையில், பகுதிநேர வகுப்புக்களுக்குச் செல்லும் மாணவிகள், சந்தைக்குச் செல்லும் மக்கள், மற்றும் ஏனை இதர விடயங்களுக்காக பொது வெளியில் நடமாடும் பெண்கள் அணிந்திருக்கும் தங்க நகைகளை கொள்ளையர்கள் மிகவும் சூட்சூமமான முறையில் அவதானித்து அந்த ஆபரணங்களை களவாடிக் கொண்டு செல்கின்றனர்.

உருக்கப்பட்ட நிலையில்
இவ்வாறு களவுச் செயலில் ஈடுபட்ட இருவரை களுவாஞ்சிகுடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரு ஆண்களும் 22 மற்றும் 23 வயது மதிக்கத்தக்கவர்கள் எனவும் அவர்கள் அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
கொள்ளையடித்த தங்க நகைகளை அக்கறைப்பற்று பிரதேசத்திலுள்ள தங்க நகை விற்பனை நிலையம் ஒன்றில் விற்பனை செய்திருந்ததோடு அவை உருக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளன.

ஆலோசனையின் பெயரில்
அதில் 6 கிராம் கொண்ட 2 தங்க கட்டிகளும், 22 கிராம் கொண்ட ஒரு தங்க கட்டியும், கொள்ளைச் சம்பவத்திற்குப் பயன்படுத்தியதாக கருதப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்றையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் அஜித் ரோகண வழிகாட்டுதலின் பெயரில், மட்டக்களப்பு மாவட்ட காவல்துறை அத்தியட்சகர் களுவாஞ்சிகுடி உதவி காவல்துறை அத்தியட்சகர் மற்றும் களுவாஞ்சிகுடி காவல் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோருக்கு வழங்கிய ஆலோசனையின் பெயரில் செயற்பட்ட களுவாஞ்சிகுடி காவல் நிலையப் பெருங்குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் இவர்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களை எதிர்வரும் 16 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.