மக்களோ வரிசையில் - எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை என அறிவிக்கும் அரச அதிகாரி
இலங்கையில் அனைத்துவித எரிபொருளுக்கும் தட்டுப்பாடு நிலவும் நிலையில் நாட்டில் எரிபொருளுக்கு தடடுப்பாடு இல்லை என்கிறார் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க.
டீசல்,பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் என நாளாந்தம் அவற்றை பெறுவதற்கு மக்களும் வாகனங்களும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக தவம் கிடக்கின்றன.
எனினும் மக்கள் தேவையில்லாமல் எரிபொருளை சேமித்து வைப்பதே வரிசையில் நிற்பதற்கு காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அதிகளவான மக்கள் கூட்டம் காணப்படுவதனால் எரிபொருள்களை விநியோகிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் இன்னும் சில நாட்களில் அந்த வரிசைகள் முடிவுக்கு வரும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஐஓசியின் எரிபொருள் விலை அதிகரிப்பும் எரிபொருள் வரிசைக்கு மற்றொரு காரணம். இதன் காரணமாக IOC வாடிக்கையாளர்கள் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்தும் எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக வருவதாகவும் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கும் போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதால், தேவையில்லாமல் எரிபொருளை பதுக்கி வைப்பதை தவிர்க்குமாறு அவர் கேட்டுக்கொள்கிறார்.
இதேவேளை மண்ணெண்ணைய்க்கு வரிசையில் நின்ற 83 வயதான முதயவர் ஒருவர் இன்றும் உயிரிழந்ததுடன் இவ்வாறு வரிசையில் நின்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
