தீராத கடன் சுமைக்கு மத்தியில் சிறிலங்கன் ஏர்லைன்ஸை மீட்டெடுக்க நகலெடுக்கப்பட்ட வாக்குறுதி
இலங்கையில் பெரும் நட்டத்தில் இயங்கிவரும் நிறுவனமான சிறிலங்கன் ஏர்லைன்ஸை இலாமம் ஈட்டும் திட்டத்தில் கொண்டு செல்ல மீண்டும் ஒரு புதிய ஐந்தாண்டுத் திட்டத்தை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கொண்டுவந்துள்ளமை சமூக மட்டத்தில் கேள்விகளை எழுப்பியுள்ளது.
2010-ஆம் ஆண்டு முதல் மாறி மாறி ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு அரசாங்கமும் இதே போன்ற ஐந்தாண்டுத் திட்டங்களை அறிவித்தது.
அந்த திட்டங்கள் அனைத்தும் வெறும் அறிக்கைகளுடன் நின்றுவிட்ட பின்னணியில் அநுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றில் அறிவித்த அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்ட உரையில் 5 ஆண்டு திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.
இலாபத்தை ஈட்ட இலக்கு
2010 முதல் மாறி மாறி வந்த அரசாங்கங்களின் திட்டங்கள் ஒரே மாதிரியானவையே எனவும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

2010 - 2011: விமானங்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கி, 500 மில்லியன் டொலர் முதலீட்டில் இரண்டு ஆண்டுகளில் லாபம் ஈட்டுவோம் என அறிவிக்கப்பட்டது.
2013 - 2016: எரிபொருள் சிக்கன விமானங்கள் மற்றும் புதிய வழித்தடங்கள் மூலம் 'சமநிலை' (Break-even) நிலையை எட்டுவோம் எனக் கூறப்பட்டது.
2018 - 2019: புதிய இயக்குநர் சபைகள் நியமிக்கப்பட்டு, நான்கு ஆண்டுகளில் நிறுவனத்தைத் தலைகீழாக மாற்றுவோம் எனத் தெரிவிக்கப்பட்டது.
2026: தற்போது மீண்டும் புதிய குழுக்கள் நியமிக்கப்பட்டு, உள்ளக மாற்றங்கள் மூலம் ஆண்டு இறுதியில் சிறிய அளவிலான இலாபத்தை ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இவ்வாறு சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை ஆட்சிக்கு வந்து மாற்றுவோம் என கையிலெடுத்த ஆட்சியாளர்கள் மாறியுள்ள போதும் அபிவிருத்தி என்பதில் எந்த மாற்றவும் உருவாகவில்லை.
தோல்வியில் முடிந்த முயற்சி
இலங்கையில் உள்ள நிறுவனத்தைத் தனியார்மயமாக்குவது அல்லது முதலீட்டாளர்களை ஈர்ப்பது குறித்துப் பலமுறை முயற்சிகள் எடுக்கப்பட்டபோதும் அவை தோல்வியிலேயே முடிந்துள்ளன.

2023-ஆம் ஆண்டு முதலீட்டாளர்கள் கோரப்பட்டு, 2024 ஜூலையில் அந்த ஏல நடைமுறை இரத்து செய்யப்பட்டது.
இதற்கு முக்கியக் காரணமாக நிறுவனத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள 461 பில்லியன் முதல் 580 பில்லியன் ரூபாய் வரையிலான பாரிய கடன் சுமையே பார்க்கப்படுகிறது.
பிறர் ஏற்படுத்திய நட்டத்தையும், கடனையும் சுமந்துகொண்டு எந்தவொரு தனியார் முதலீட்டாளரும் முன்வரத் தயாராக இல்லை.
சிறிலங்கன் ஏர்லைன்ஸின் விமானப் போக்குவரத்துப் பிரிவு மட்டுமே நஷ்டத்தில் இயங்குகிறது. ஆனால், அதன் துணைப் பிரிவுகளான விமான உணவு விநியோகம் மற்றும் தரைத்தள சேவைகள் ஆகியவை தொடர்ச்சியாக இலாபம் ஈட்டி வருகின்றன.
எனவே, நட்டம் தரும் பிரிவையும், இலாபம் தரும் பிரிவையும் தனித்தனியாகப் பிரித்து முதலீட்டாளர்களை அழைத்தால் மட்டுமே இதற்குத் தீர்வு காண முடியும் எனப் பொருளாதார ஆய்வாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இருப்பினும், நிறுவனத்தை மறுசீரமைக்கவோ அல்லது விற்கவோ முற்படும்போது தொழிற்சங்கங்கள் மற்றும் எதிர்க்கட்சிகளிடமிருந்து எழும் அரசியல் எதிர்ப்புகளுக்கும், ஊழியர்களின் வேலை இழப்பு சார்ந்த அழுத்தங்களுக்கும் அஞ்சி, அரசாங்கங்கள் உறுதியான முடிவெடுக்காமல் காலத்தைக் கடத்தி வருகின்றன.
எவ்வாறாயினும் இத்தகைய தாமதங்களால் பொதுமக்களின் வரிப்பணமே தொடர்ச்சியாக வீணடிக்கப்படுவதே தொடர்கிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |