இலங்கையின் நடவடிக்கைகளுக்கு ஐ.எம்.எப் பாராட்டு
இலங்கையின் பொருளாதாரத்தை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கென்ஜி ஒகாமுரா தெரிவித்துள்ளார்.
கடினமான நேரத்தில் இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கு அதிகபட்ச பங்களிப்பை வழங்க எதிர்பார்ப்பதாக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கென்ஜி ஒகாமுரா இலங்கை அதிபரை சந்தித்து கலந்துரையாடிய போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து நேற்று(31)பிற்பகல் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன உள்ளிட்ட நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் உறுப்பினர்களையும் சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது, இலங்கையின் பொருளாதாரத்தை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கு பல அடிப்படையான சாதகமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதை பாராட்டுவதாக கென்ஜி ஒகாமுரா தெரிவித்தார்.
இலங்கைக்கு உதவி
இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கு உதவிகளை வழங்க முன்வந்தமை தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலீனா ஜோர்ஜீவா உள்ளிட்ட பணிப்பாளர்களுக்கு இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாக சபாநாயகர் தெரிவித்தார்.
அதேபோன்று, தற்போதைய நெருக்கடியை தீர்க்க பொருளாதார உறுதித்தன்மைக்கு தேவையான கடுமையான தீர்மானங்களை எடுக்கவேண்டி ஏற்பட்டதாகவும், வெளிப்படைத் தன்மையுடன் கூடிய புதிய பொருளாதாரப் நோக்குக்காக நாடாளுமன்றத்தில் வரவு செலவுத்திட்ட அலுவலகத்தை அமைத்தல், ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தை அறிமுகம் செய்தல், புதிய மத்திய வங்கிச் சட்டத்தை அறிமுகம் செய்தல் போன்ற பல சாதகமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சபாநாயகருடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து கென்ஜி ஒகாமுரா நாடாளுமன்ற சபா மண்டபத்தைப் பார்வையிட்டார்.
அதனையடுத்து அவர் நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் அங்கத்தவர்களுடன் சுமுகமான கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.
