மன்னார் காற்றாலை திட்டத்தை நிறுத்துங்கள் : வவுனியாவில் மனிதச்சங்கிலி போராட்டம்!
மன்னாரில் (Mannar) முன்னெடுக்கவுள்ள காற்றாலைத் திட்டத்தை நிறுத்தக்கோரியும், இல்மனைற் அகழ்விற்கு எதிராகவும் மன்னாரில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சத்தியாக்கிரக போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் மனிதச்சங்கிலி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்டத்திற்கு அண்மையில் இன்று (11) காலை குறித்த போராட்டம் நடைபெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த போராட்டக்காரர்கள், ”அபிவிருத்தியின் பெயரால் மக்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் இத்திட்டங்களை நிறுத்தவேண்டும்.
அழிவை எதிர் நோக்கி உள்ள தீவு
இலங்கையின் மீன்பிடி தொழில் மற்றும், பறவைகளின் பாதுகாப்பு சரணாலயம், இயற்கை காற்றின் வலு முதலானவற்றிற்கு பெயர் பெற்ற இடமாக மன்னார் விளங்குகிறது.
இந்தநிலையில் ஏகபோக இராட்சத பல்தேசிய கம்பெனிகளின் இலாப வேட்டையாலும், இலங்கை அரசாங்கங்களின் கையாலாகாத நிலையாலும் அழிவை எதிர் நோக்கி உள்ளது மன்னார் தீவு.
ஏற்கனவே உள்ள காற்றாலைகளால் மீன் கரைக்கு வருவது குறைந்துவிட்டது. மீன் இனப்பெருக்கம் குன்றிவிட்டது. காற்றாலைகளின் அமைப்பால் தரையில் ஏற்படுத்தப்பட்ட மாறுதல்கள் வடிகாலமைப்பை மாற்றிவெள்ளப்பெருக்கு மற்றும் நிலத்தடி நீர் உவராதலை ஏற்படுத்தியுள்ளது.
காற்றாலைகளின் இரைச்சலால் மன்னாருக்கு வரும் வலசைப்பறவைகளின் வருகையை தடுக்கவும் பாதையை மாற்றவும் அவை காற்றாடிகளால் இறக்கும் நிலையையும் ஏற்படுத்தி உள்ளது. இது மட்டுமின்றி மக்களின் வாழ்விலும் காற்றாலைகளின் ஒலி மாசு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இராணுவ தேவை
அத்துடன் மன்னார் மண்ணின் கீழ் இருக்கும் இல்மனைட், தோரியம் போன்ற கனிமவளங்கள் இன்றைய நவீன விஞ்ஞான உபகரணங்கள் மற்றும் இராணுவ தேவைகளுக்காக உலக நாடுகளுக்கு தேவைப்படுகின்றது.
அதில் முதலீடு செய்வது பெரும் இலாபம் தரும் என்பதால் பல் தேசிய நிறுவனங்கள் முண்டியடிக்கின்றன. எனவே மன்னாரில் நடைபெற இருக்கின்ற இவ் அகழ்வு மன்னார் தீவையே மனித வாழ்வுக்கு உகந்ததாக இல்லாமல் செய்துவிடும் அளவிற்கு ஆபத்தானது.
இந்த காற்றாலை மற்றும் கனியஅகழ்வு நாட்டின் தேவைக்கானதன்றி பல்தேசிய கம்பனிகளின் இலாபக் குவிப்புக்கானதே என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்” என்று தெரிவித்தனர்.
இப்போராட்டத்தில் அரசியல் தரப்பினர், சமூக செயற்ப்பாட்டாளர்கள், பொது அமைப்புக்களை சேர்ந்தவர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் மாலை திருவிழா


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 3 நாட்கள் முன்
