காலத்திற்கு பொருத்தமில்லாத பொது வேட்பாளர் :பிள்ளையான் அறிவிப்பு
சிறுபான்மை மக்கள் ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதென்பது காலத்திற்கு
பொருத்தமில்லாத செயற்பாடாகும் என இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன்(பிள்ளையான்) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டம் எருவில் கிராமத்தில் இன்று (20) மாலை நடைபெற்ற சித்திரை விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பொதுவேட்பாளர்
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், "எதிர்வரும் ஒக்டோபர் நடுப்பகுதிக்கு முன்னர் தேர்தல் ஒன்று நடைபெறவுள்ளதாக ரணில் அறிவித்துள்ளார்.
நாட்டில் அடுத்த தலைவர் யார் என்ற பலமான கேள்வி இருக்கின்றது.எமக்கான தலைவரை தேர்வு செய்வதற்கு அதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்குவதற்குரிய திட்டங்களை நாங்கள் தீட்டியுள்ளோம்.
தற்போது இலங்கையிலுள்ள சிறுபான்மை மக்களை மையப்படுத்தியதாக பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தவேண்டும் என்ற தகவல்கள் ஊடகங்களில் வெளிவருகின்றன.
இந்த பொது வேட்பாளர் தொடர்பில் நாங்கள் ஆழமாக ஆராய வேண்டும். யாரும் அரசியலுக்காக கருத்துக்களைச் சொல்லலாம். இவ்வாறானவர்கள் முன்னரும் வடகிழக்கிலுள்ள சிறுபான்மை மக்களை ஒற்றுமைப்படுத்துவோம் என சொல்வார்கள், அதனைச் செயல்படுத்த முடியாமல் போய்விடும்.
இலங்கைத் தமிழரசுக் கட்சி
இதற்கு நல்ல உதாரணம் தான் இலங்கைத் தமிழரசுக் கட்சியினுடைய தேசியமாநாடும், அதன் தலைவர் தெரிவும்.சிறிலங்கா அரசிடமிருந்து தீர்வு பெற்றுத் தருவோம் என்றவர்கள், அதன் நீதித்துறையின் காலடியில் வீழ்ந்து கிடக்கின்றார்கள்.
கட்சிக்குள்ளேயே ஒரு அமைப்பை ஒன்றுபடுத்த முடியாத தலைவர்கள் நாம் மட்டுமே தான் என சிந்திக்கின்ற யாழ்ப்பாணத்து தலைவர்கள், இந்த மண்ணுக்கும் இந்த நாட்டுக்கும் ஒன்றையுமே பெற்றுக் கொடுக்கவுமில்லை, பெற்றுக் கொடுக்கப்போவதுமில்லை.
அந்த
அடிப்படையில் பொது வேட்பாளர் என்ற கருத்தும் அங்கிருந்துதான்
ஆரம்பித்திருக்கின்றார்கள். அது வெற்றிபெற முடியாத, திட்டமிடல் இல்லாத ஒரு
கற்பனை.அவர்கள் ஒலிவாங்கிகளுக்கு முன்னால் கருத்துக்களை வெளியிடும் ஒரு
புரளியாகும்.
எனவே சிறுபான்மை மக்கள் ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதென்பது காலத்திற்கு பொருத்தமில்லாத செயற்பாடாகும்."என அவர் சுட்டிக்காட்டினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |