உடைத்தெறிக்க மேற்கொள்ளும் முயற்சிகளால் பிணைப்புகள் வலுவடையும்: மகிந்தவின் பதிவு!
உடைத்தெறிக்க மேற்கொள்ளும் முயற்சிகளால் பிணைப்புகள் மேலும் வலுவடையும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவொன்றை இடுவதன் மூலம் அவர் இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.
மக்களுடனான தனது உறவை உடைப்பது மிகக் கடினம் என்பதை அவர் குறித்த பதிவின் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்களுடைய அன்பு
மேலும் அவரது பதிவில், “எனது வாழ்நாளின் பெரும்பகுதியை மக்களுடன் கழித்ததால், மக்களுடைய அன்பை பற்றி நான் நன்கு அறிவேன்.
நம்பிக்கை மற்றும் மரியாதையை அடிப்படையாகக் கொண்ட மக்களின் அன்பானது, இலாப நோக்கங்களிலிருந்து விடுபட்டது. ஆகவே, அதன் மதிப்பு எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாகும்.
இது வெறுமனே அரசியல் ரீதியான உறவு மட்டுமல்ல, இதயப்பூர்வமான பிணைப்பு என்பதால் இதனை உடைப்பது மிக கடினம். உடைத்தெறிக்க மேற்கொள்ளும் முயற்சிகளால் பிணைப்புகள் மேலும் மேலும் வலுவடையும்.
மக்களுடன் செலவழித்த இந்த நேரம் முழுவதும் ஒரு மக்கள் தலைவராக பெறக்கூடிய மிகப்பெரிய மகிழ்ச்சியை நான் அனுபவித்திருக்கிறேன். அனைவருக்கும் எனது மரியாதைக்குரிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என பதிவிட்டுள்ளார்.
கார்ல்டன் இல்லம்
முன்னாள் ஜனாதிபதிகளுக்கான வரப்பிரசாதங்களை நீக்கும் சட்டம் அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து தனது சொந்த ஊரான தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்திற்கு சென்றார்.
இந்நிலையில், அரசியல் தலைவர்கள் உட்பட அதிகளவான மக்கள் மகிந்த ராஜபக்சவை காண அவருடைய கார்ல்டன் இல்லத்திற்கு சென்று வருகின்றனர்.
இவ்வாறு, தன்னைக் காண வரும் மக்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பகிர்ந்துக் கொண்டு, அவர் குறித்த பதிவை இட்டுள்ளார்.
இதேவேளை, அண்மையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும், மகிந்த ராஜபக்சவை காண சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
