பிரித்தானியாவில் கொலை செய்யப்பட்ட மாணவன்! இந்திய வம்சாவளி இளைஞனுக்கு ஆயுள் தண்டனை
கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த 18 வயது மாணவர் ஒருவருக்கு, அவர் மரணப் போராட்டத்தில் இருந்தபோதே காவல்துறையினர் கைவிலங்கு போட்ட சம்பவம் பிரித்தானியா முழுவதும் கடும் சர்ச்சையையும் கண்டனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பரில் தெற்கு இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் இடம்பெற்ற தாக்குதலில் உயிரிழந்த ஹென்றி நோவாக் தொடர்பான வழக்கில், அவரைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 23 வயதான சீக்கிய இளைஞன் விக்ரம் திக்வாவுக்கு திங்கள்கிழமை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
சம்பவம் நடைபெற்ற நேரத்தில், நோவாக் தன்னை இனவெறி அடிப்படையில் தாக்கியதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த திக்வா காவல்துறையிடம் தெரிவித்திருந்தார்.
பொய்யான குற்றச்சாட்டு
பின்னர் அது பொய்யான குற்றச்சாட்டு என நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தப்பட்டது. காவல்துறையினரின் உடல் கண்காணிப்பு கமெராவில் பதிவான காணொளியில், தெருவில் காயமடைந்து கிடந்த நோவாக் “என்னை குத்திவிட்டார்கள்”, “என்னால் மூச்சுவிட முடியவில்லை” என்று கூறுவது பதிவாகியுள்ளது.

அதற்கு பதிலளித்த காவல்துறை அதிகாரி ஒருவர், “அப்படி நடந்ததாக நான் நினைக்கவில்லை, நண்பரே” என்று கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியது அவசியம் என பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
இனவெறி குற்றச்சாட்டுகள் இந்த வழக்கின் முடிவெடுக்கும் செயல்முறையை எவ்வாறு பாதித்தன என்பது குறித்து தீவிரமான கேள்விகள் உள்ளன.
ஸ்டார்மரின் செய்தி
அந்தக் காணொளியைப் பார்த்த பிறகு, அவற்றுக்கு கட்டாயம் பதில் அளிக்கப்பட வேண்டும் என்பது தெளிவாகிறது, என்று ஸ்டார்மர் செய்தியாளர்களிடம் கூறினார்.

வழக்கை விசாரித்த நீதிபதி வில்லியம் மௌஸ்லி, இந்தச் சம்பவம் பிரித்தானியா முழுவதும் இனரீதியான பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.
இதனிடையே, குடியேற்ற எதிர்ப்பு கொள்கைகளை முன்னிறுத்தும் ரீஃபார்ம் கட்சித் தலைவர் நைஜல் பாரேஜ், இந்தச் சம்பவம் வெள்ளை பிரித்தானியர்களின் உரிமைகளை விட சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதற்கான உதாரணம் எனக் குற்றம்சாட்டினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |