நண்பர் மகிந்தவை விரைவில் சந்திப்பேன் - சுப்ரமணியன் சுவாமி அறிவிப்பு
சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்சவை(Mahinda rajapaksa) சந்தித்து பேச விரைவில் சிறிலங்கா செல்லவுள்ளதாக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி(Subramanian Swamy) தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கான சிறிலங்கா தூதுவர் மிலிந்த மொரகொடவை (Milinda Moragoda) தனது இல்லத்துக்கு அழைத்து தேநீர் விருந்து கொடுத்த தொடர்பிலும் சிறிலங்காவிற்கான பயணம் குறித்தும் தனது டுவிட்டர் பக்கத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
I am pleased to tweet that PM Rajapaksa has invited me to Colombo to celebrate Navratri with his family. I shall also address the SL Defence Forces Seniors on “National Security”.
— Subramanian Swamy (@Swamy39) October 1, 2021
விரைவில் சிறிலங்கா சென்று நண்பர் ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினரை சந்திப்பேன். இன்னும் எனது பயணம் விபரம் இறுதி செய்யப்படவில்லை. பயண விபரம் வடிவமைக்கப்பட்ட பிறகு அது குறித்த மேலும் சில தகவல்களை ட்விட்டரில் பகிர்வதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சுப்ரமணிய சுவாமியின் இந்த டுவிட்டர் பதிவு தமிழ் தேசிய ஆதரவாளர்கள் மத்தியில் விவாதத்தை எழுப்பியுள்ளது. பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி விடுதலை புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவர்.
விடுதலை புலிகள் விவகாரத்தில் மகிந்த ராஜபக்சேவின் நடவடிக்கைகளை பாராட்டியவர்.
ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக பிரகடனம் செய்ய வேண்டும் என தமிழ் தேசியவாதிகளும், ஈழத்தமிழ் ஆதரவாளர்களும் தொடர்ந்து குரல் எழுப்பி வரும் சூழலில் அவருக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்பட்டு வருபவர் சுப்ரமணியன் சுவாமி என்பது குறிப்பிடத்தக்கது.