வெற்றிபெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார் பைடன் -திடீரென ட்ரம்பிடம் ஏற்பட்ட மனமாற்றம்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடனின் வெற்றியை அமெரிக்க எம்பிக்கள் இன்று அதிகாரபூர்வமாக அறிவித்தனர். அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய வன்முறைக்குப் பின்னர்,பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் மீண்டும் கூடின. அப்போது தேர்வாளர் வாக்குகள் முறையாக விவாதிக்கப்பட்டு எண்ணப்பட்டன.
அதன் முடிவில் பைடனுக்கு 306 தேர்வாளர் வாக்குகளும், டிரம்புக்கு 232 தேர்வாளர் வாக்குகளும் கிடைத்ததாக அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பைடனின் வெற்றி அதிகாரபூர்வ வெற்றியாக மாறியது. இந்த நிலையில், அதிபர் தேர்தல் தோல்வியை ஏற்றுக் கொள்வதாக டிரம்ப் முதன்முறையாக தெரிவித்துள்ளார்.
சுமுகமாகவும், முறையாகவும் பைடனிடம் அதிகாரத்தை ஒப்படைக்க தயாராக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை இன்று நடைபெற்ற கலவரத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.