சூடானில் வலுக்கும் மோதல் : வெளியேற்றப்பட்ட இலங்கையர்கள்
சூடானில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் உள்நாட்டுப் போரினால் சூடானின் தலைநகரம் கார்டூம் (Khartoum) இல் அமைந்துள்ள பல கட்டிடங்கள் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தற்சமயம் நைல் நதிக்கு அண்மையில் காணப்படும் 18 மாடிகளை கொண்ட கட்டிடம் ஒன்றில் பாரிய தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூடானின் அரச படையினருக்கும் கிளர்ச்சி குழுக்களுக்கும் இடையில் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து உள்நாட்டுப் போர் இடம்பெற்று வருகின்றது.
10,000 பேர் வரை உயிரிழப்பு
இதுவரையான காலப்பகுதியில் சுமார் 10 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், 12 ஆயிரம் பேர் வரை காயமடைந்துள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, வன்முறைகள் ஆரம்பித்த தினத்திலிருந்து இதுவரை சுமார் 20 இற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் அந்நாட்டிலிருந்து ஏனைய நாடுகளுக்கும் இலங்கைக்கும் வெளியேற்றப்பட்டுள்ளனர் என சூடான் உயர்ஸ்தானிகராலயத்தின் கடமை நேர அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அத்துடன், ஏதேனும் சந்தேகம் காணப்பட்டால் சூடானிலுள்ள இலங்கைக்கான அலுவலகத்துடன் தொடர்பினை ஏற்படுத்தி விபரங்களை அறிந்துக்கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.