இந்தியா சீனி ஏற்றுமதிக்கு தடை: இலங்கையில் சீனி விலை அதிகரிப்பு
கடந்த சில நாட்களாக உள்நாட்டுச் சந்தையில் சீனி விலை சற்று அதிகரிக்கப்பட்டுள்ளதாக சந்தை நிலவரங்கள் மூலம் தெரிய வருகின்றது.
நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் அமெரிக்க டொலரின் பெறுமதி காரணமாகவே சீனியின் விலை சற்று அதிகரிக்கப்பட்டுள்ளதாக சீனி இறக்குமதி வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போதைக்கு நாட்டில் அடுத்த மூன்று மாதங்களுக்குப் போதுமான சீனி கையிருப்பில் உள்ளதாகவும், சீனித் தட்டுப்பாடு காரணமாக விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவதையும் அவர்கள் மறுத்துள்ளனர்.
சீனி ஏற்றுமதியை நிறுத்திய இந்தியா
உள்நாட்டுத் தேவையை கருத்திற்கொண்டு கடந்த 15ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், வரும் செப்டம்பர் 30ஆம் திகதி வரை சீனி ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கைக்கு அதிகளவில் சீனி இந்தியாவிலிருந்தே இறக்குமதி செய்யப்பட்டு வந்த நிலையில், இந்த தடை காரணமாக இலங்கை புதிய சந்தைகளை நாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியா சீனி ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதால், பிரேசில் மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து சீனியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் தற்போதைக்கு போதிய சீனி கையிருப்பு உள்ளதால் சந்தையில் தட்டுப்பாடு ஏற்படாது என அந்த சங்கம் உறுதியளித்துள்ளது
இலங்கையின் நுகர்வோர் தேவைக்காக இந்தியாவில் இருந்தே பெருமளவில் சீனி இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |