அரசாங்கத்தின் ஆண்டு வருமானத்தில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு!
சீனிக்கான திருத்தப்பட்ட வரியின் காரணமாக அரசாங்கத்தின் ஆண்டு வருமானம் 27 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (09) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
சீனிக்கான வரி
"ஒரு கிலோகிராம் சீனிக்கான வரியானது 25 சதத்திலிருந்து 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சீனி மீதான இந்த வரி அதிகரிப்பிற்கான முக்கிய காரணமாக, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஒப்பந்தத்திற்கான உறுதிப்பாட்டை நிரூபிக்க அரசாங்கம் தனது வருமானத்தினை அதிகரிப்பதற்கான ஒரு நடவடிக்கையாக சீனிக்கான வரியினை அதிகரித்துள்ளது.
அரசாங்கம் மாதாந்தம் 45,000 மெற்றிக் தொன் சீனியை இறக்குமதி செய்வதனால் இந்த வரி அதிகரிப்பு அரசாங்கத்திற்கான ஆண்டு வருமானத்தை அதிகரிக்கிறது.
இதேவேளை இந்த வரி அதிகரிப்பினால் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள், இதனால் பாதிக்கப்படும் மக்களுக்கான அரசாங்க செலவுகள் மற்றும் கொடுப்பனவுகளை வழங்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
வரித் திருத்தமானது
கடந்த நவம்பர் மாதம் 04 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், அரசாங்கம் சர்க்கரை மீதான இறக்குமதி வரியை ஒரு கிலோகிராம் இற்கு 25 சத்தித்திலிருந்து இருந்து 50 ரூபாயாக ஒரே இரவில் உயர்த்தியுள்ளது.
இந்த வரித் திருத்தமானது குறிப்பிட்ட சில வர்த்தகர்களுக்கு பயனளிக்கும் என்று குறிப்பிடப்பட்டாலும் பொதுமக்கள் பெருவாரியாக பாதிக்கப்படுவார்கள்."என அவர் தெரிவித்தார்.
மேலும் வரி திருத்தம் குறித்த தகவல்கள் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக முன்வைக்கப்படுவதற்கு முன்பே, வெளியே கசிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.