வடமாகாண முதலமைச்சர் வேட்பாளர் நானே : சுமந்திரன் அதிரடி அறிவிப்பு
வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகத் தான் களமிறங்கவுள்ளதாக அக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் (M.A. Sumanthiran) அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர்களை ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர்கள் நேற்று யாழ். நல்லூரில் (Jaffna) உள்ள சுமந்திரனின் இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர்.
இதன்போது அடுத்து வரும் மாகாண சபைத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகத் தானே களமிறங்கப் போவதாக சுமந்திரன் கூறியதாக ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் இணைத்தலைவர்களில் ஒருவரான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண முதலமைச்சர்
அத்துடன், சுமந்திரனின் இந்த நிலைப்பாட்டுக்கு ஆதரவு அல்லது எதிர்ப்பு என்ற விடயங்கள் குறித்து எதுவும் நாங்கள் பேசவில்லை என்றும் த.சித்தார்த்தன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் உள்ளூராட்சி சபைகளில் ஒன்றிணைந்து ஆடசியமைப்பது குறித்து இந்தச் சந்திப்பில் பேசப்பட்டாலும் மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இயங்குவது தொடர்பில் எதுவும் பேசவில்லை என்று கூறியுள்ளார்.
தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் சிவஞானம் சிறீதரன், தான் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடமாட்டார் என ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகத் தான் போட்டியிடவுள்ளதாக சுமந்திரன் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
