மாவீரம் போற்றும் இந்த மாதத்தில் மறைந்த சிவாஜிலிங்கம்: சண் மாஸ்டர் புகழஞ்சலி
சிறீலங்கா நாடாளுமன்றம் தொடக்கம் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட பன்னாட்டு அரங்குகள் வரை ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காக ஓங்கி ஒலித்த குரல் இன்று அடங்கிவிட்டதாக தமிழ்நாட்டின் மனிதவுரிமை செயற்பாட்டாளர் சண் மாஸ்டர் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளருமான எம்.கே. சிவாஜிலிங்கத்தின் மறைவையொட்டி சண் மாஸ்டர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“ சிவாஜிலிங்கம் அண்ணா மறைந்துவிட்டார் என்ற அதிகாலைச் செய்தி, தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் அனைவரையும் நிலைகுலையச் செய்துள்ளது.
இலட்சியப் போராளி
மாவீரம் போற்றும் இந்த மாதத்தில் மறைந்த எங்கள் அண்ணாவிற்கு உலகத் தமிழர்களோடு இணைந்து எனது வீர வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பல்வேறு நிகழ்ச்சி நிரல்களுக்கு மத்தியில், மரணத்தின் இறுதிவரை எவ்வித சமரசமுமின்றி வாழ்ந்த இலட்சியப் போராளி அவர்.
தேசியத் தலைவரின் தாய், தந்தையரின் இறுதிக் கடமைகளை முன்நின்று செய்ததன் மூலம், உலகம் முழுவதும் பரந்து வாழும் இலட்சக்கணக்கான தமிழர்களின் இதயங்களை வென்ற துணிச்சல் மிக்க வேங்கையாக அவர் வரலாற்றில் நிலைத்திருப்பார்.
முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்குப் பின்னர், முதலாவது ஜனநாயக ரீதியான போராட்டத்தை முன்னெடுக்கத் திட்டமிட்டபோது பலரும் தயங்கிய நிலையில், சிவாஜிலிங்கம் அண்ணா தந்த நம்பிக்கையை என்றும் மறக்க முடியாது.
ஆழமான வரலாற்றுப் பதிவு
ஒரு போராளி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாக விளங்கியவர் அவர்.

அவர் சென்னைக்கு வரும்போதெல்லாம் எமது இல்லத்திற்கு வருகை தந்து குடும்பத்தினருடன் பாசத்தோடு பழகிய நாட்களை மறக்க முடியாது.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆழமான வரலாற்றுப் பதிவுகள் அவரிடம் இருந்ததால், தனது அனுபவங்களைத் தொகுத்து ஒரு நூலாக எழுதுமாறு அவரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன்.
அதற்கு அவர், 'சத்திரசிகிச்சை முடிந்து உடல்நிலை சீரானதும் நிச்சயம் எழுதுகின்றேன் மாஸ்டர்' என என்னிடம் இறுதியாகக் கூறியிருந்தார்.
ஆனால், அந்த வரலாற்றுப் பதிவுகளைக் கேட்பதற்குள் அவர் எம்மை விட்டுப் பிரிந்துவிட்டார்.
அன்னாரை இழந்து வாடும் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் துயரத்தில் நானும் பங்கெடுத்துக்கொள்கிறேன்." இவ்வாறு சண் மாஸ்டர் தனது இரங்கல் செய்தியில் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |