சுரேஷ் சலே கைது : முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரிக்காக நீதிமன்றில் முன்னிலையான அலி சப்ரி
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசில்துறை பொறுப்பாளராக செயற்பட்ட தமிழ்ச்செல்வத்தை இல்லாது செய்வதற்காக, சுரேஷ் சலே முன்னின்று செயற்பட்டார் என சட்டத்தரணி அலி சப்ரி (Ali Sabry) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தாம் கைது செய்யப்படுவதைத் தடுப்பதற்கான உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி, இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் உறுப்பினரான கேர்ணல் கெலும் மத்துமகே மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
குறித்த மனு நேற்று (25) மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதிபதி பிரியந்த பெர்ணான்டோ ஆகியோர் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் மனுதாரர் சார்பில் முன்னிலையான போதே அலி சப்ரி இவ்வாறு குறிப்பிட்டார்.
காவல்துறை அதிகாரிகள் கொலை
நீதிமன்றில் தொடர்ந்தும் கருத்துக்களை முன்வைத்த அலி சப்ரி, நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு பாரிய அர்ப்பணிப்புகளை சுரேஷ் சலே ஆற்றியிருந்ததார் எனவும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல்துறை பொறுப்பாளராக செயற்பட்ட தமிழ்ச்செல்வத்தை இல்லாது செய்வதற்காக, சுரேஷ் சலே முன்னின்று செயற்பட்டார் எனவும் சுட்டிக்காட்டினார்.

அதேபோல, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேசதுறை பொறுப்பாளராக செயற்பட்ட குமரன் பத்மநாதனை, மலேஷியாவில் இருந்து, சுரேஷ் சலே நாட்டுக்கு அழைத்து வந்ததார் என குறிப்பிட்டதுடன், தேசியப் பாதுகாப்புடன் விளையாடுவது சிறந்த விடயம் அல்ல என தெரிவித்தார்.
இந்த நிலையில், 2015 ஆம் ஆண்டும் இவ்வாறானதொரு நடவடிக்கை இடம்பெற்றதை சுட்டிக்காட்டிய சட்டத்தரணி, அதனைத் தொடர்ந்து நாட்டின் ஒட்டுமொத்த தேசிய பாதுகாப்பு நிலைமையும் அபாயத்தில் வீழ்ந்ததாகவும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.
இவ்வாறானதொரு நிலையில், மட்டக்களப்பு - வவுணதீவு பகுதியில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டமையுடன் தொடர்புடைய விசாரணையை திசைதிருப்ப முயற்சித்ததாக குற்றம் சுமத்தினார்.
ஷானி அபேசேகர தலைமை
இந்த நிலையில் தனது சேவை பெறுநரான கேர்ணல் கெலும் மத்துமகேவுக்கு எதிராக, குற்றப் புலனாய்வு திணைக்களம் தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவ்வாறானதொரு விசாரணையை மேற்கொள்வதற்கு எந்தவித அடிப்படை சாட்சிகளும் இல்லை எனவும் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகரவின் தலைமையில் நடத்தப்படும் இந்த விசாரணைகளில், தமது சேவை பெறுநருக்கு நீதியை எதிர்பார்க்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல் தஞ்சம் கோரியுள்ள அசாத் மௌலான என்ற தனிநபர் ஒருவர், பிரித்தானியாவிலுள்ள தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலை அடிப்படையாகக் கொண்டே குறித்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான விசாரணைகளில் பாதிக்கப்பட்டோர் தரப்புக்கு எந்தவித நீதியும் கிடைக்கப் போவதில்லை எனவும் சட்டத்தரணி அலி சப்ரி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |