இன்று முதல் பாடசாலை நேரங்களில் விதிக்கப்பட்ட தடை - வெளியான புதிய அறிவிப்பு
பாடசாலை இடம்பெறும் நாட்களில் கனிமப் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையில் திருத்தம் மேற்கொண்டுள்ளது.
கட்டுமானத் துறையில் உள்ளவர்களின் கோரிக்கைகளை பரிசீலித்த பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் விளக்கமளித்துள்ளது.
போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு தடை
அந்தவகையில், பாடசாலை இடம்பெறும் நாட்களில் கனிமப் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு தடை விதிப்பதற்கு முன்னதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அதன்படி பாடசாலை நாட்களில் காலை 6.30 மணி முதல் 7.45 மணி வரையிலும், முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரையிலும் கனிமப் போக்குவரத்து நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அண்மையில் பாடசாலை போக்குவரத்தில் ஈடுபடும் வேனுடன் மணல் ஏற்றிச் சென்ற லொறி ஒன்று மோதி விபத்துக்குள்ளானதை அடுத்து முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருந்ததாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் அறிவித்திருந்தது.
கடுமையான மேற்பார்வை
அதன்படி, குறித்த காலப்பகுதியில் கனிமப் போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வாகனங்கள் வீதியோரத்தில் முறையாக நிறுத்தப்பட வேண்டும் என அதன் பணிப்பாளர் கூறியிருந்தார்.
எவ்வாறாயினும் கட்டுமானத் துறையினர் எதிர்நோக்கும் அசௌகரியங்களை கருத்திற்கொண்டு அதில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
அதன்படி, மேற்கூறிய காலங்களில் பாடசாலைகள் மற்றும் மாணவர் கடவைகளுக்கு அருகில் கனிமப் போக்குவரத்து நடவடிக்கைகள் வேக வரம்புடன் காவல்துறையினரின் கடுமையான மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இன்று முதல் புதிய விதிகளுக்கு அமைய செயற்பட முடியும் எனவும் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
