சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கியுள்ள இலங்கையர்களின் விபரங்களை திரட்டும் அரசு
சுவிஸ் வங்கியில் கோடிக்கணக்கான சுவிஸ் பிரேங்குகளை வைப்பில் வைத்திருப்பவர்களின் விபரங்களை இலங்கை அரசாங்கம் கோரிய போதிலும் அதனை சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் நிராகரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இலங்கையைச் சேர்ந்த சுமார் 40 பேரது வங்கிக் கணக்கு விபரங்களை அரசாங்கம் கோரியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுவிட்ஸர்லாந்திலுள்ள சுவிஸ் வங்கியில் கோடிக்கணக்கான சுவிஸ் பிராங்குகளை வைப்பில் வைத்திருப்பவர்கள் குறித்த தகவல்களை இலங்கை அரசாங்கம், சுவிஸ் அரசிடம் கோரியிருப்பதாக தென்னிலங்கை பத்திரிகையொன்று நேற்றைய தினம் செய்தி வெளியிட்டிருக்கிறது.
அதில் - இலங்கையைச் சேர்ந்த சுமார் 40 பேரது சுவிஸ் வங்கிக் கணக்குத் தகவல்களை அளிக்கும்படி கோரப்பட்டிருக்கின்றது. இருந்த போதிலும் சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் அந்தத் தகவல்களை அளிப்பதற்கு நிராகரித்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலுள்ள சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் தகவல்களை மேற்கோள்காட்டி இந்தச் செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய சுவிஸ் வங்கியின் நிதிக்கட்டுப்பாடு மற்றும் கொள்கைகளை சுட்டிக்காட்டியுள்ள சுவிஸ் அரசாங்கம், இலங்கையின் கோரிக்கையை நிராகரித்திருக்கின்றது.
இதேவேளை சுவிஸ் வங்கியில் வைப்பிலிடப்பட்டிருக்கும் பணம் மற்றும் கணக்கு உரிமையாளர்கள் பற்றிய விபரங்கள் அந்த வங்கியினால் சாதாரணமாக எந்த நாட்டவர்களுக்கும் வழங்கப்படுவதில்லை.
இருப்பினும் வழக்கு விசாரணை மற்றும் ஏனைய அரச கருமத்திற்காக சம்பந்தப்பட்ட அரசாங்கத்தினால் நியாயமான கோரிக்கை விடுக்கப்படும் சந்தர்ப்பத்தில் அதனை சுவிஸ் வங்கியின் நிர்வாகம் ஆய்வுக்கு உட்படுத்தும் என்று கூறப்படுகின்றது.
எந்த சந்தர்ப்பத்திலும் மூன்றாவது நபருக்கு வங்கிக் கணக்கு மற்றும் இதர தகவல்களை சுவிஸ் வங்கியினால் வழங்கப்படுவதில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.