இலங்கைக்கு வெளியே சென்ற சொத்துக்களை மீட்க முன்வந்த சுவிட்சர்லாந்து அரசு
இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் உதவி வழங்கும் என இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான சுவிட்சர்லாந்துத் தூதுவர் சிறி வோல்ட் உறுதியளித்துள்ளார்.
ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்கவிற்கும் சுவிட்சர்லாந்து தூதுவருக்கும் இடையில் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, இந்த நாட்டின் சொத்துக்களை மீட்பதற்கு எடுக்க வேண்டிய சர்வதேச நடவடிக்கைகள் குறித்து சுவிட்சர்லாந்து தூதுவர் ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.
ஊழல் எதிர்ப்பு திட்டம்
அதன் அடிப்படையில், இதற்கான பூர்வாங்க வசதிகளை வழங்க தேவையாயின் எந்த நேரத்திலும் அதற்கு உதவி வழங்கவும் அவர் இணக்கம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் ஊழல் எதிர்ப்பு திட்டத்திற்கு சுவிட்சர்லாந்தின் அனுபவத்தையும் தொழில்நுட்ப அறிவையும் வழங்குவது தொடர்பிலும் சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
தேவையான உதவிகள்
அத்தோடு, அரசாங்க முன்னுரிமை திட்டங்களுக்கு சுவிட்சர்லாந்து அரசாங்கத்தின் தொழில்நுட்ப மற்றும் ஏனைய தேவையான உதவிகள் மற்றும் "Clean Sri Lanka" திட்டத்திற்கு வழங்கக்கூடிய ஒத்துழைப்பு குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
வடக்கு அபிவிருத்தி, தேசிய ஒற்றுமை மற்றும் ஏனைய சமூகப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளுக்கு இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதற்கும் தேவையான உதவிகளை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுப்பதாகவும் சுவிட்சர்லாந்து தூதுவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |