அம்பாறையில் பாழடைந்த கிணற்றில் இருந்து ஆயுதங்கள் மீட்பு!
அம்பாறை மாவட்டம் - திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட காஞ்சிரங்குடா கிராம அலுவலர் பிரிவில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து, T-56 ரக தோட்டாக்கூடுகள் மற்றும் இலகுரக இயந்திரத் துப்பாக்கியின் (LMG) பாகங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவைப் பெற்ற திருக்கோவில் காவல்துறையினர், பழைய விசேட அதிரடிப்படை உணவகத்திற்கு முன்பாக உள்ள குறித்த கிணற்றிலிருந்து ஆயுதங்களையும் அவற்றின் பாகங்களையும் மீட்டெடுத்துள்ளனர்.
அந்தவகையில் T-56 ரகத் தோட்டாக்கூடுகள் - 09, போல்ட்கள் மற்றும் ஏனைய பாகங்களுடன் கூடிய T-56 துப்பாக்கிப் பாகங்கள் - 03, இலகுரக இயந்திரத் துப்பாக்கியின் (LMG) பாகங்கள்/ தோட்டாக்கூடுகள் - 06 என்பன இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணைகள்
உயர் காவல்துறை அதிகாரிகளின் வழிகாட்டலில் கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் மற்றும் அம்பாறை - மட்டக்களப்பு மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபரின் உத்தரவின் பேரிலும், அம்பாறை பிராந்திய சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் நேரடி வழிகாட்டலிலும் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

அக்கரைப்பற்று உதவி காவல்துறை அத்தியட்சகரின் மேற்பார்வையில், திருக்கோவில் காவல் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான காவல்துறை பரிசோதகர் தலைமையிலான காவல்துறை குழுவினர் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |