ஜேர்மன் விமான நிறுவனத்தின் அலட்சியம் -தமிழ் மருத்துவருக்கு ஏற்பட்ட நிலை
ஜேர்மன் விமான நிறுவனத்தின் அலட்சிய போக்கால், தான் பாதிக்கப்பட்டதாக தெரிவித்து நீதிமன்றில் வழக்கு தொடர்ந்த பெங்களூரைச் சேர்ந்த தமிழ் மருத்துவருக்கு இழப்பீடு வழங்குமாறு விமான நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கால தாமதமாக வந்த விமானம்
பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கடமையாற்றும் 54 வயதுடைய கே.எஸ்.கிஷோர் என்பவர் கடந்த 2014-ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற மருத்துவ ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தார். பின்னர், அவர் ஓர்லாண்டோவில் இருந்து பிராங்பேர்ட்டுக்கு விமானம் மூலம் சென்றார்.
இந்த நிலையில் பிராங்பேர்ட் விமான நிலையத்திற்கு, அவர் பயணித்த ஜேர்மன் விமானம் காலதாமதமாக வந்து சேர்ந்தது. இதையடுத்து அவர் பெங்களூருவுக்கு புறப்பட தயாராக இருந்த விமானத்தை பிடிக்க முயன்றார். எனினும் அந்த விமானம் புறப்பட 15 நிமிடங்களே இருந்த நிலையில் அதில் ஏற அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து அவர் அந்த விமான நிலையத்தில் காத்திருந்து பின்னர், மற்றொரு விமானம் மூலம் பெங்களூருவுக்கு வந்தார்.
நீதிமன்றில் வழக்கு
இந்த நிலையில் அவர் பெங்களூரு நுகர்வோர் நீதிமன்றில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் ஜேர்மன் விமானத்தின் அலட்சியப்போக்கால் பெங்களூருவுக்கு புறப்பட இருந்த விமானத்தை தவறவிட்டதாகவும், அதுகுறித்து விமான நிறுவன ஊழியர்களிடம் கேட்டபோது அவர்கள் முறையாக பதில் அளிக்கவில்லை எனவும் கூறி இருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ஜேர்மன் நாட்டு விமான நிறுவனத்தின் அலட்சியத்தால் தான் பெங்களூரு விமானத்தை பிடிக்க முடியவில்லை என்பது உறுதியாகி உள்ளது.
எனவே அந்த விமான நிறுவனம் சார்பில் கிஷோருக்கு ரூ.10 லட்சத்தை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.