எங்கள் விடிவுக்காக எம் வீடுகள் தோறுமிருந்து போராளிகள் புறப்பட்டனர்! தென்னிலங்கையில் தீபச்செல்வன்
வடக்கின் பிள்ளைகளை பயங்கரவவாதிகள் என்று கடந்த ஆட்சியாளர்கள் மக்களுக்கு சொல்லிக் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ள ஈழ எழுத்தாளர் தீபச்செல்வன், எங்கள் தேசத்திற்காகப் போராடிய தமிழ் மக்களின் பிள்ளைகளை சிங்கள மக்கள் புரிந்துகொள்ளுகிற ஏற்றுக்கொள்ளுகிற நிலை என்று உருவாகிறதோ அன்று சமாதானம், நல்லிணக்கம், உரிமைப் பரிமாற்றம் என்பன இடம்பெறும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மாத்தறை மாவட்டத்தின் ஹக்மண பிரதேச சபையின் வாசகர் சமூகத்தின் ஏற்பாட்டில் தீபச்செல்வனின் எழுத்துக்கள் குறித்து நடந்த இலக்கிய நிகழ்வு கடந்த ஏப்ரல் 30ஆம் திகதி நடைபெற்ற போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் நிகழ்வில் பேசுகையில், "வீட்டுக்கு வீடு வாசல் படி என்பது தமிழில் உள்ள பழமொழி. ஆனால் எங்கள் வீடுகள் ஒவ்வொன்றிலும் எங்கள் விடுதலைக்காகவும் உரிமைக்காகவும் போராடி இறந்திருக்கிறார்கள்.விடுதலை புலி மாவீரனைப் பற்றிய என்னுடைய நடுகல் நாவல் நான்கு பதிப்புக்களை கண்டிருப்பது சிங்கள மக்கள் எங்கள் வீட்டுப் பிள்ளைகளை ஏற்றுக்கொண்டிருப்பதன் வெளிப்பாடு என்று நான் நம்புகிறேன்.." என்றும் கூறியுள்ளார்.
தீபச்செல்வனின் படைப்புக்கள்
அதன்போது, ஹக்மண பிரதேச சபை தவிசாளரும் பேராதனை பல்கலைக்கழக முன்னாள் மாணவர் ஒன்றியத் தலைவருமான ரங்கன செனிவிரத்தின தொடக்க உரையை ஆற்றியதோடு, நடுகல் நாவல் பற்றியும் அதில் வரும் மாவீரன் வெள்ளையன் பற்றியும் மிகவும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து தலைவர் பற்றியும் போராளிகள் பற்றியும் எடுத்துரைத்துள்ளார்.

சிங்கள எழுத்தாளர்களான திலீனா வீரசிங்க மற்றும் சம்மாணி விஜேசிங்க ஆகியோரும் சிங்களத்தில் வெளியான தீபச்செல்வனின் படைப்புக்கள் குறித்துப் பேசியுள்ளனர்.
அனுஷா சிவலிங்கம் தீபச்செல்வனின் கவிதைகள் குறித்துப் பேசியதோடு, நான் சிறிலங்கன் இல்லை கவிதையைக் குறித்துப் பேசி அதனை வாசித்துக் காட்டியுள்ளார்.
புத்தக தடை
இந்த நிலையில், தீபச்செல்வன் தன்னுடைய உரையில், குறிப்பாக சிங்கள எழுத்தாளர்கள் அண்மைய நெருக்கடித் தருணத்தில் சரியான வகையில் உடனிருந்தமைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

நிகழ்வில் கலந்து கொண்ட சரத் பிரேமதிலக சிறந்த கருத்துரை ஒன்றை வழங்கியுள்ளார்.அண்மைய புத்தக தடை பற்றியும் அரசுக்கு எதிராகப் பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
நிகழ்வை பிரசாத் துஷித தொகுத்து வழங்கிய நிலையில், ஹக்மண பிரதேச சபையின் ஒழுங்கமைப்பில் எழுத்தாளர்கள், கலைஞர்கள், வாசகர்கள், இளையவர்கள் என நிகழ்வில் மண்டபம் நிறைந்தளவில் மக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |