அதிபர் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர்
--2009 மே மாதம் போர் இல்லாதொழிக்கப்பட்டு பதின் நான்கு ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில் சர்வதேச அரங்கில் ஈழத்தமிழர் விவகாரம் தொடர்ந்தும் பேசுபொருளாக இருக்கின்றது. ஆனால் புவிசார் அரசியல் பொருளாதார நிலைமைகளை ஆராய்ந்து அதற்கேற்ப நகர்வுகளை முன்னெடுக்கக்கூடிய தமிழ் அரசியல் கட்டமைப்புகள் ஒழுங்கான முறையில் இல்லை. குறிப்பாக ரசிய - உக்ரெயின் போர், இஸ்ரேல் பலஸ்தீனியப் போர் ஆகிய புவிசார் அரசியல் பொருளாதாரப் போட்டிச் சூழலுக்குள் ஈழத் தமிழர்கள் மிக நுட்பமாகக் கையாள வேண்டிய திட்டங்கள் பல உண்டு. தற்போதைய உலக அரசியல் ஒழுங்குக் குழப்ப நிலைமையை இலங்கை உரிய முறையில் பயன்படுத்தி வருகின்றது--
இந்த நிலையிலேதான் அடுத்த ஆண்டு அதிபர்த் தேர்தல் நடைபெறும் என்று அதிபர் ரணில் விக்ரமசிங்க அறிவித்திருக்கிறார். தமிழ்த்தேசியக் கட்சிகள் குறிப்பாக 2001 இல் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயலிழந்து காணப்படும் நிலையில் அதிபர்த் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பாகப் பல கேள்விகள் எழுகின்றன.
இலங்கையில் இனப் பிரச்சினை
குறிப்பாக தமிழரசுக் கட்சியை மையப்படுத்திய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும், ரெலோ. ஈபிஆர்எல்எப், புளொட் ஆகிய இயக்கங்களை மையப்படுத்திய புதிய ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் எவ்வாறு எந்தப் புள்ளியில் ஒன்று சேர்ந்து பயணிக்கவுள்ளன என்ற கேள்விகளும் நம்பிக்கையீனங்களும் விஞ்சியுள்ளன.
தமிழர்கள் யாருக்கு வாக்களிப்பது என்ற கேள்விகள் பல சிந்தனைகளையும் கவலைகளையும் தூண்டிவிடுகின்றன.
கொழும்பை மையமாகக் கொண்ட எந்த ஒரு பிரதான சிங்களக் கட்சிகளின் வேட்பாளர்களும் ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை குறித்த விவகாரங்களில் அக்கறை கொண்டவர்களாக இருக்க வாய்ப்பில்லை என்பது பட்டறிவு.
அதுவும் 2009 மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் இலங்கையில் இனப் பிரச்சினை என ஒன்று இல்லை என்ற நிலைப்பாடு சிங்கள கட்சிகள் அனைத்திடமும் உண்டு. சிவில் சமூக அமைப்புகள் மற்றும் சிங்கள ஊடகங்களும் அவ்வாறான கருத்துக்களையே முன்வைத்தும் வருகின்றன.
இது "சிங்கள நாடு" என ஒரு பகுதியும் இது "சிங்கள பௌத்த நாடு" என பெரும்பான்மையான சிங்கள மக்களும் கருதுகின்ற சூழல் சிங்களப் பிரதேசங்களில் மேலோங்கி வருகின்றன.
சர்வதேச அரங்கில் தமிழ்த்தேசியம்
இந்த நிலையில் அதிபர்த் தேர்தலில் வடக்குக் கிழக்கில் உள்ள அனைத்துத் தமிழ்த்தேசியக் கட்சிகளும் ஒன்றிணைந்து முரண்பாட்டிலும் உடன்பாடாகப் "பொது வேட்பாளர்" ஒருவரை நிறுத்தி அவருக்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் செய்ய வேண்டும்.
அனைத்துத் தமிழ் மக்களும் குறித்த தமிழ் பொதுவேட்பாளருக்கு வாக்களித்தாலும் இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பின் பிரகாரமும் அதன் தேர்தல் முறையின் மூலமாகவும் வெற்றிபெற முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும்.
ஆனாலும் வடக்குக் கிழக்குத் தமிழர்களின் ஒட்டுமொத்த வாக்குகளும் பொது வேட்பாளருக்குக் கிடைக்குமானால் "தமிழ்த்தேசியம்" என்ற நிலைப்பாட்டை சர்வதேச அரங்கில் நிறுவ முடியும்.
அத்துடன் பிரதான சிங்கள வேட்பாளர்களில் எவரும்அதிபராவதற்குரிய ஆகக் குறைந்தது ஐம்பத்து ஒரு சதவீத வாக்குகளை பெறமுடியாத நிலை ஏற்பட்டால் தமிழ்ப் பொது வேட்பாளரின் வாக்குப் பலத்தினாலோயே இந்த நிலை ஏற்பட்டது என்றும் அதன் மூலம் ஈழத்தமிழர்களின் பலத்தையும் காண்பிக்க முடியும். பேரம் பேசவும் முடியும்.
ஆகவே இதனைப் புரிந்துகொண்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் தமிழ் ஊடகங்கள் என்று பல்வேறு தரப்பினரும் ஒருமித்த குரலில் இப்போதிருந்தே செயலாற்ற வேண்டும்.
எண்பது வருட அரசியல் போராட்டம்
1994 ஆம் ஆண்டு சந்திரிகாவில் இருந்து 2010 இல் சரத் பொன்சேகா, 2015 இல் மைத்திரிபால சிறிசேன, 2020 இல் ரணில் - சஜித் கூட்டு என தொடர்ச்சியாக நம்பி வாக்களித்துத் தமிழர்கள் எதுவும் கண்டதேயில்லை.
கடந்த எண்பது வருட அரசியல் போராட்டத்தில் தமிழர்களுக்கு அழிவுகளும் ஏமாற்றங்களும் விஞ்சியுள்ள பின்னணியில் அவற்றைப் படிப்பினையாக எடுத்து, அதிபர்த் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்தி தமிழ்த்தேசிய நிலைப்பாட்டையும் சிங்களக் கட்சிகள் மீதான நம்பிகையீனங்களையும் உலகத்துக்கு வெளிப்படுத்த வேண்டிய நேரமிது.
பொய்யான, கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை வழங்கும் பிரதான சிங்களக் கட்சி ஒன்றின் வேட்பாளருக்கு வாக்களிப்பதால் எந்தப் பயனும் இல்லை என்பதை வரலாற்று ஆதாரங்களுடன் மக்களிடம் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்.
மாறாகஅதிபர்த் தேர்தலை புறக்கணிப்பதாலோ அல்லது யாரேனும் ஒரு சிங்கள வேட்பாளரை ஆதாரிப்பதாலோ எந்தப் பயனும் இல்லை. தமிழ் மக்கள் தங்கள் பொது வேட்பாளருக்கு மாத்திரம் வாக்களித்தால் அவருக்குரிய வாக்குகள் நேரடியாகவே எண்ணப்படும்.
உதாரணமாக தமிழ் பொது வேட்பாளருக்கு மாத்திரம் வாக்களிப்பதாக இருந்தால் 1 என்ற இலக்கத்துக்கு முன்பாக அல்லது (X) வாக்களித்தால் மட்டும் போதும். வேறு வேட்பாளர்கள் எவருக்கும் விருப்பு வாக்களிப்பது பற்றித் தமிழ் மக்கள் யோசிக்க வேண்டிய அவசியமே இல்லை.
பொது வேட்பாளா் தெரிவு
தேர்தல் விதிகளின் பிரகாரம் பிரதான கட்சிகளின் இரு சிங்கள வேட்பாளர்கள் ஐம்பத்து ஒரு சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளைப் பெற்றும் நிலை ஏற்பட்டால், விருப்பு வாக்குகளை எண்ணும் நிலை எற்படும்.
இதனைக் கருத்தில் எடுத்து ஏனைய சிங்கள வேட்பாளர்களுக்கு விருப்பு வாக்களிக்கும் முறையை புகுத்தாமல், தமிழ் பொது வேட்பாளருக்கு மாத்திரம் வாக்களியுங்கள் என்று தெளிவான முறையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் பிரச்சாரம் செய்ய வேண்டும்.
அதேநேரம் ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, சிறிலங்கா பொதுஜனபெரமுனக் கட்சி மற்றும் ஜே.வி.பி போன்ற சிங்களக் கட்சிகளின் தமிழ் முகவர்கள் வடக்குக் கிழக்கில் தத்தமது கட்சிகளின் வேட்பாளர்களுக்காகப் பிரச்சாரத்தில் ஈடுபடுவர்.
அத்துடன் தமிழ்த்தேசிய நிலைப்பாட்டைச் சிதைத்து தமிழ் மக்கள், சிங்களக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு அல்லது இலங்கை இராணுவத்துடன் சேரந்து இயங்கும் தமிழ் ஆயுதக் குழுக்களின் தவறான வியூகங்களுக்கு ஏற்ப வாக்குகள் சிதறும் முறையில் பிரச்சாரங்கள் முன்னெடுக்கபடக்கூடிய ஆபத்துக்களும் உண்டு.
இவற்றையெல்லாம் முறியடித்து ஒருமித்த குரலாகத் தமிழ்த் தேசிய அரசியலை நிலை நிறுத்தக்கூடிய அளவுக்குப் பொது வேட்பாளா் ஒருவர் தெரிவு செய்யப்பட வேண்டும். அந்தப் பொதுவேட்பாளர் தமிழ்த்தேசியக் கட்சிகளின் உறுப்பினராக அல்லது ஏதேனும் ஒரு தமிழ்க் கட்சியின் முக்கிய பிரமுகராகவும் இருக்கக் கூடாது.
கட்சி அரசியல் சார்பில்லாத, தமிழ்த்தேசியத்தை ஒருமித்த குரலில் செயற்படுத்தக்கூடிய மற்றும் பொதுக் கட்டமைப்பு ஒன்றை உருவாக்கக்கூடிய ஆற்றல் மிக்க ஒருவரையே பொது வேட்பாளராக நியமிக்க வேண்டும்.
கிழக்கில் இருந்து பொதுவேட்பாளர் தெரிவாவது தமிழ்த் தேசிய அரசியலுக்கு மேலும் ஆரோக்கியமானதாக அமையும். பொது வேட்பாளர் நியமனத்தின் மூலம் அனைத்துத் தமிழ்த் தேசியக் கட்சிகளும் ஒரே கட்சியாக இயங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அவசியமற்றவை.
சர்வதேச போர்க் குற்ற விசாரணை
ஒவ்வொரு கட்சிகளும் தங்கள் தங்கள் நிலைப்பாட்டுடன் நாடாளுமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு செயற்படலாம். தற்போதைய உலக புவிசார் அரசியல் - பொருளாதாரப் போட்டிச் சூழலுக்குள் தேர்தல் அரசியலும் முக்கியமானது என்ற கருத்தை மறுக்க முடியாது.
இருந்தாலும் கட்சி அரசியல் செயற்பாடுகளுக்கு அப்பால் தமிழ்த்தேசிய நிலைப்பாட்டை ஒருமித்த குரலாக முன்னெடுக்கக்கூடிய பொதுப் பொறிமுறை அல்லது தேசிய இயக்கம் போன்ற செயற்பாடுகளில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றித்துச் செயலாற்றக்கூடிய வியூகங்களை வகுக்க வேண்டும்.
மாறாக இனஅழிப்பு விசாரணைக் கோரிக்கைகள் மற்றும் சர்வதேச போர்க் குற்ற விசாரணை பற்றிய அழுத்தங்கள் கட்சி அரசியலுக்குள்ளும் தனிப்பட்ட கருத்துக்கள், அறிக்கைகள் அல்லது தனிப்படக் கடிதம் எழுதுதல் என்ற ஒருமித்த குரல் அற்ற வியூகங்களுக்குள் அமுங்கி விடக்கூடாது.
2009 இற்குப் பின்னர் பதின்நான்கு வருடங்கள் கடந்துவிட்ட சூழலில் கூட்டுச் செயற்பாடும் கூட்டுப் பொறிமுறையும் அவசியம் என்பதைத் அதிபர்த் தேர்தலில் பொதுவேட்பாளரை நிறுத்தும் முயற்சியின் மூலம் தமிழ்த்தரப்பு உறுதிப்படுத்த வேண்டும்.
இப் பின்புலத்துடன் "தமிழ்ப் பொதுவேட்பாளர்" என்ற முடிவு உறுதியானால், சிங்களக் கட்சிகளுக்கும் கொழும்பில் வெளிநாட்டு இராஜதந்திரிகள் பலருக்கும் அது கசப்பாக இருக்கும். இதனால் பிரித்தாளும் தந்திரோபாயங்கள் கொழும்பில் இருந்து கையாளப்படக்கூடிய ஆபத்துகள் உண்டு.
வெளிநாட்டு தூதுவர்கள் அடிக்கடி வடக்குக் கிழக்குக்குச் சென்று வரும் நிலையும் உண்டு. யாழ்ப்பாணத்தில் உள்ள துணைத் தூதரகம் ஒன்றும் வியூகங்களை வகுக்கலாம்.
ஆகவே இவ்வாறான தந்திரோபாயங்களுக்குள் சிக்குப்படாமல், தற் துணிவோடும் சுயமரியாதையுடனும் ஒவ்வொரு தமிழ்த் தேசியக் கட்சிகளும் பொதுவேட்பாளர் விடயத்தில் செயற்பட வேண்டும்.
இல்லையேல் "தமிழ் பொது வேட்பாளர்" என்ற சிந்தனையைக் கைவிடுவது நல்லது. ஏனெனில் தமிழ்த்தேசியப் பரப்பில் ஏற்கனவே உள்ள பலவீனங்களை அது மேலும் விரிவுபடுத்திவிடும் ஆபத்தும் இல்லாமலில்லை.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Sathangani அவரால் எழுதப்பட்டு, 02 November, 2023 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.