உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்க வேண்டும் : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
புதிய இணைப்பு
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை விசாரித்துவிட்டு இன்றே விடுவிக்க வேண்டும் எனவும் உதயநிதியும் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உதயநிதி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட முன்பிணை மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் பிற்பகலில் விசாரணைக்கு வந்தது.
இதன்போது, அரச தலைமை சட்டத்தரணி கூறுகையில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி விசாரணைக்கு பின்னர் விடுவிக்கப்படுவார். உதயநிதியை சிறையிலடைக்கும் எண்ணம் இல்லை. உதயநிதி விசாரணைக்கு பின் காவல்துறை பிணையில் விடுவிக்கப்படுவார்“ என்று தெரிவித்தார்.
இதனையடுத்து, விசாரணைக்கு பின்னர் உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டார்.
மேலும், காவல்துறை விசாரணைக்கு உதயநிதி முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

நான்காம் இணைப்பு
உதயநிதியின் கைது ஜனநாயக விரோதம்.... கொந்தளிக்கும் தி.மு.க : மு.க. ஸ்டாலின் முக்கிய ஆலோசனை
உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அறிவாலயத்தில் கட்சி நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் முக்கிய ஆலோசனை நடத்தி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உதயநிதி ஸ்டாலின் கைதுசெய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க.வினர் பல்வேறு நகரங்களிலும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், பல்வேறு பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு வருவதுடன் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் கலவரம் பரவி விடாமல் இருப்பதற்காக, அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.
உதயநிதி கைது தொடர்பாக தி.மு.க. வெளியிட்ட செய்தியில், உதயநிதி கைது நடவடிக்கை ஜனநாயக விரோதம். அவர் மீது பொய் வழக்கு போடப்பட்டு உள்ளது. கைது நடவடிக்கையால், உதயநிதியையோ, தி.மு.க.வையோ முடக்க முடியாது.
நாளை தமிழக சட்டசபை கூடவுள்ள நிலையில், இன்று கைது நடவடிக்கை ஏன்? சட்டசபை கூட்டத்தொடரில் உதயநிதி எழுப்பவுள்ள கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது என்ற அச்சத்தில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது“ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் இணைப்பு
தமிழகத்தில் வெடித்த போராட்டம்: உதயநிதி கைதால் கொந்தளித்த மேயர் பிரியா - அரசின் மீது பாய்ச்சல்
தி.மு.க. தொண்டர்கள் மீது லத்திச்சார்ஜ் நடத்தும் அளவுக்கு நாங்கள் என்ன தீவிரவாதிகளா என்று சென்னை மேயர் பிரியா கேள்வி எழுப்பியுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து, தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் சாலை மறியல் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதியின் இல்லம் முன்பும் ஏராளமான திமுக தொண்டர்கள் திரண்ட நிலை அவர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தி கைது செய்தனர்.
கைதுக்கு கடும் கண்டனம்
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த சென்னை மேயர் பிரியா, உதயநிதி ஸ்டாலின் கைதுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

மேலும், "தி.மு.க. தொண்டர்கள் மீது லத்திச்சார்ஜ் நடத்தும் அளவுக்கு நாங்கள் என்ன தீவிரவாதிகளா? தியேட்டருக்கு சென்று 'ஜனநாயகன்' படம் பார்த்து அழுகிறார்கள்.
ஆனால் இன்று காவல்துறையினரை வைத்து ரத்தம் வரும் அளவுக்கு அடிக்கிறார்கள் இதுதான் ஜனநாயகமா? காவல்துறை உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்ய முடியாது. இந்த அராஜக அரசியலை கண்டு நாங்கள் ஒருபோதும் அஞ்ச மாட்டோம்" என்று கூறினார்.
இரண்டாம் இணைப்பு
தமிழக முதல்வர் விஜய்யை தரக்குறைவாக பேசிய விவகாரம் தொடர்பில் திமுக இளைஞரணி செயலாளரும் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காவிரி விவகாரம் தொடர்பாக தவெக அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் திமுக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து உதயநிதி ஸ்டாலின் கடுமையாகப் பேசியது சர்ச்சையாகியுள்ளது.
முதல்வர் விஜய்யை, உதயநிதி ஸ்டாலின் இழிவாக பேசியதாக அவர் மீது பல்வேறு காவல்நிலையங்களில் தவெகவினர் புகார் கொடுத்திருந்த நிலையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.
முதலாம் இணைப்பு
குவிக்கப்பட்ட காவல்துறையினர்
சென்னையில் உள்ள உதயநிதி ஸ்டாலின் வீடு முன்பாக இன்று காலை முதலே ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காவிரி விவகாரம் தொடர்பாக தவெக அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் திமுக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 8 மாவட்டங்களைச் சேர்ந்த திமுகவினர் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் முதல்வர் ஜோசப் விஜய் மற்றும் பெண்களை விமர்சித்து, உதயநிதி ஸ்டாலின் இழிவாகப் பேசியது சர்ச்சையாகியுள்ளது.
கடும் வாக்குவாதம்
அதேபோல உதயநிதி மீது தவெக மகளிரணியினர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தஞ்சாவூர் காவல் நிலையத்தில் உதயநிதி ஸ்டாலின் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால் உதயநிதி ஸ்டாலின் வீட்டுக்கு திமுக முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் சென்றனர்.
ஆனால் காவல்துறையினர் அவர்களை தடுத்ததால் திமுக முன்னாள் அமைச்சர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திமுகவின் வழக்கறிஞர்களும் காவல்துறையினரால் தடுக்கப்பட்டனர்.
இதையடுத்து சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதியின் வீட்டின் முன்பாக இன்று காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அவரது வீட்டின் உள்ளே சென்ற காவல்துறையினர், அவரது குடும்பத்தினரிடம் பேசி வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |