தமிழ் தேசிய இனப் பிரச்சினையை இனங்காண இதுவே வழி: சுரேஸ் பிரேமச்சந்திரன் சுட்டிக்காட்டு
ஐக்கியப்பட்டு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தி பல இலட்சம் வாக்குகளைப் பெறுவதன் மூலமே தமிழ் தேசிய இனப் பிரச்சனை இன்னமும் இருக்கின்றது என்பதை மீள சொல்ல முடியும் என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியின் (ஈபிஆர்எல்எப்) தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நேற்றையதினம்(24) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “நாங்கள் பல்வேறுபட்ட தடைகளை தாண்டி வந்திருக்கின்றோம். எங்களுடைய ஆயுதப் போராட்டம் தொடங்கி 40 வருடங்கள் முடிந்து விட்ட நிலை, என்ன காரணத்திற்காக ஆயுதப் போராட்டம் தொடங்கியதோ அந்த நிலைமை மோசமாக இன்றும் இருக்கிறது.
13 ஆவது திருத்தச் சட்டம்
இலங்கையில் இதுவரை வந்த ஆட்சியாளர்கள் ஈழத் தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சனையை தீர்ப்பவர்களாக இதுவரை இல்லை.
ஈழத் தமிழ் மக்களின் பிரச்சனைக்கு இதுவரை தீர்வு எட்டப்பட்டது என்றால் அது இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் கொண்டு வரப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டம் ஒன்று தான் எமது அரசியல் சாசனத்தில் உள்ள விடயமாக உள்ளது.
13வது திருத்தத்தில் உள்ள மாகாணசபையைக் கூட தருவதற்கு தயாரில்லை, கடந்த 6, 7 வருடங்காளாக அதற்கு தேர்தலும் நடத்தப்படாத நிலை உள்ளது, மாகாணங்களுக்குரிய அதிகாரங்கள் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
அதிபர் தேர்தல்
அதேநேரம், இந்தவருடம் தேர்தலை எதிர்நோக்கும் ஒரு வருடமாகவும் இருக்கின்றது, அதிபர் தேர்தல் நடந்தே ஆக வேண்டும் என்ற நிலை இருக்கின்றது.
முதலில் நாடாளுமன்ற தேர்தலை நடத்த வேண்டும் என்றும் ஒரு சில கருத்துக்கள் உருவாகி வருகின்றன, நாடாளுமன்ற தேர்தல் நடத்துவதற்கான சூழ்நிலைகள் இருகின்றதா? இன்று பலமான பொதுஜன பெரமுன கட்சியில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதை எதிர்கொள்ளத் தயாரா? 113 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தை கலைப்பதை ஏற்பார்களா? என்றால் அதற்கான சூழ்நிலைகள் இல்லை என்றே சொல்ல வேண்டும்.
ஆகவே, இவ்வாறான நிலையில் ஒரு அதிபர் தேர்தலுக்கு முகம் கொடுக்கும் நிலை உள்ளது” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |