தமிழ் மக்களுக்கு அநுர மீது சந்தேகம் - சாடும் தமிழரசு கட்சியின் எம்பி
அநுரகுமார அரசு மீது எங்களுக்கும் தமிழ் மக்களுக்கும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது என தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் (P. Sathiyalingam) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (22) நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், எமது நாடு வங்குரோத்து நிலையில் இருந்து மீள வேண்டுமானால் முதலீடுகளை நாட்டுக்குள் வசதிகள் முக்கியம். இந்திய அரசினால் 65 மில்லியன் டொலர் இலங்கை அரசுக்கு கொடுப்பதற்கான ஏற்பாடுகள் நடந்தன.
பொருளாதாரத்தை வலுப்படுத்த கூடிய நிலை
ஆனால் அது இழுத்தடிக்கப்படுகின்றன. காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம் வடக்கு மாகாணம் மட்டுமல்ல முழு நாடும் தன்னுடைய வருமானத்தை அதிகரிக்க கூடிய பொருளாதாரத்தை வலுப்படுத்த கூடிய நிலைமை தானாக வரும்போது அதை நாம் நழுவ விட்டுக் கொண்டிருக்கின்றோம்.
வவுனியா மாவட்டத்தில் உள்ள 4 பிரதேச செயலாளர் பிரிவுகளில் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வெடிவைத்த கல் கிராம சேவையாளர் பிரிவில் இருக்கின்ற மக்கள் வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டுவந்து குடியேற்றப்பட்ட பெரும்பான்மையின் மக்களோடு ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக படுகொலைகள் நடந்ததன் காரணமாக, 1983ஆம் ஆண்டு அங்கிருந்து வெளியேறியிருந்தனர்.
அவர்கள் இந்த யுத்தம் முடிந்த பின்னர் தங்களின் சொந்தக் காணிகளுக்கு செல்வதற்கு முயற்சி எடுத்தபோது, 2019ஆம் ஆண்டு திரிவைத்த குளத்திற்கு கீழிருக்கும் 150 ஏக்கர் வயல் பிரதேசத்தைத் திருத்தம் செய்து தாம் மீண்டும் அங்கு தொழிலை செய்வதற்கு முற்பட்டவேளை வனவளத்துறை அந்த மக்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து 5 வருடங்களுக்குப் பின்னர் 2024 ஆம் ஆண்டு அந்த வழக்கு அடிப்படையான எந்த ஆதாரமும் இல்லாத வழக்கு என தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்தக் காலப்பகுதியில் அங்குள்ள விவசாயிகள் அந்த வயல்களுக்கு செல்லக்கூடாது என்று கட்டளை இடப்பட்டிருந்தது.
இனப் பரம்பலை மாற்றும் செயற்பாடு
இதனால் அந்த வயல் பகுதிகளுக்கு செல்லாதிருந்த குறிப்பிட்ட காலப்பகுதியில் மகாவலி அபிவிருத்தி அதிகார சபை அங்கு குடியேற்றப்பட்ட அயல் கிராம மக்களுக்கு எந்த ஒரு அனுமதியும் பெறாது குத்தகை அடிப்படையில் இந்தக் காணிகளை வழங்கியுள்ளனர்.
அந்த காணிகளை அவர்கள் சட்டத்திற்குப் புறம்பான வகையில் அந்தரவெவ கமக்காரர் அமைப்பு என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான நடவடிக்கைகளுக்கு அங்கிருந்த அரச உத்தியோகஸ்தர்களும் உடந்தையாக இருக்கின்றனர்.
இப்போது அங்கிருக்கின்ற பிரச்சினை என்னவென்றால், இந்த 150 ஏக்கருக்கு மேலதிகமாக கடந்த ஒரு மாத காலமாக கிட்டத்தட்ட 400-500 ஏக்கர் அடர்ந்த வனப்பகுதி அங்கு குடியேற்றப்பட்ட மக்களினால் துப்புரவு செய்யப்பட்டு கொண்டு இருக்கிறது.
காவல்துறையினரும் வனவளத் திணைக்களமும் இது தொடர்பில் தங்களுக்குத் தெரியாது என்கின்றனர். ஆனால், ஒரு விவசாயி வெளியைத் திருத்துவதற்கு ஒரு தடியை வெட்டினால் கூட கைது செய்கின்ற வன வள திணைக்களமும் காவல்துறையினரும் கிட்டத்தட்ட 400 ஏக்கர் வனப்பகுதியை பாரிய இயந்திரங்களைக் கொண்டு துப்புரவு செய்கின்றபோது இது தொடர்பில் தெரியாது என்கின்றனர்.
ஆகவே, இந்த நிகழ்ச்சி நிரலுக்கு பின்னால் அரசாங்கமோ அல்லது வேறு ஒரு சக்தி இருக்கிறது. ஆகவே தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் செய்த அதே தவறை, மேலாதிக்கத் தன்மையை, இனப் பரம்பலை மாற்றுகின்ற செயற்பாட்டை இந்த அரசும் செய்கின்றதோ என்ற சந்தேகம் எங்களுக்கும் மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
