மறக்கமுடியுமா இன்றைய நாளை? தமிழ் மக்களின் தலைவிதி பெரிதாய் மாறி இன்றுடன் 49 ஆண்டுகள்
இலங்கை அரசு முதன்முதலாக, இந்த நாட்டை பௌத்த நாடாக அரசியலமைப்பினூடாகவே பிரகடனம் செய்த நாள் இன்றாகும்!
தமிழர்கள் தாக்கப்பட்டதும் உடமைகள் அழிக்கப்பட்டதும் எரிக்கப்பட்டதும், உயிரோடு தார் ஊற்றிக் கொளுத்தப்பட்டதும் 58 ஆம் ஆண்டின் இன்றாகும்.
ஆயினும் நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் அரசியலமைப்பினூடகவே தமிழ் மக்களின் வரலாற்றின் தலைவிதி பெரிதான மாற்றத்துக்குள்ளானது 1972 ஆம் ஆண்டின் இன்றாகும்!
சோல்பரி அரசியலமைப்பில் நாட்டின் சிறுபான்மை இன மக்களுக்கு பாதுகாப்பாயிருந்த 29 ஆம் சரத்தையும் புதிய அரசியலமைப்பின் மூலம் இல்லாமற் செய்த நாள் இன்றாகும்!
சிறுபான்மை மக்களுக்கு ஒரு “பாதுகாப்பாகவிருந்த”- “ சென்ற் சபை” யையும் புதிய அரசியலமைப்பின் மூலம் அழித்த நாள் இன்றாகும்! தமிழ் மக்கள் காலம் காலமாகி நம்பி தம் மண்ணிலும் வளர்த்துக் காத்த இடதுசாரித் தலைமையே அவர்களைக் கழுத்தறுத்த நாள் இன்றாகும்!
ஐம்பத்தாறில் தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டபோது “ ஒரு நாடு இரு மொழி; இருநாடு ஒரு மொழி” என்று அரசை எச்சரித்த இடதுசாரித் தலைவர் கொல்வின் ஆர் டி சில்வா இதன் சூத்திரதாரியாகினார்.
இந்த அரசியலமைப்பு "ஒரு புதிய கட்டிடத்திற்கு- ஒரு புதிய அடித்தளத்தை அமைப்பதாவதுடன், இது இந்த நாட்டின் மக்கள் அதனை முற்றாக ஆட்கொள்ளும்...". என இந்த அரசியலமைப்பைப் பற்றி வர்ணித்தார்.
(M J A Cooray (1982) Judicial Role under the Constitution of Ceylon/Sri Lanka) இடதுசாரியான அவர் குறிப்பிட்ட “இந்த நாட்டின் மக்கள்” என்பது தங்களை அல்ல என தமிழ் மக்கள் உணரத் தலைப்பட்டது இன்றைய நாளிலாகும்.
அங்கிளிக்கன் கிறிஸ்தவத்திலிருந்து அரசியல் அதிகாரத்திற்காக பௌத்தத்திற்கு மாறிய பண்டாரநாயக்க குடும்பம் தமது அரசியல் இருப்பைத் தக்கவைக்க பிறப்பால் கிறிஸ்தவரான கொல்வினை வைத்தே அரசியலமைப்பின் மூலம் நாட்டை பௌத்த நாடாகவே பெயரிட்டது இன்று ஆகும்.