தேசிய ரீதியில் முறியடிக்கப்பட்ட சாதனை : தமிழர் பிரதேச மாணவி கௌரவிப்பு
பாடசாலைகளுக்கு இடையிலான 38 ஆவது தேசிய மட்ட போட்டியில் பங்கு பற்றி தேசிய ரீதியில் சாதனை படைத்து தங்கப்பதக்கம் வென்ற மன்னார் பேசாலை பற்றிமா மத்திய மகா வித்தியாலய மாணவியை கௌரவிக்கும் நிகழ்வு இன்றைய தினம் வியாழக்கிழமை (6) காலை இடம்பெற்றது.
மாணவி வில்சன் வில்சியா (14 வயது ) டயகம ராஜபக்ச விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற பாடசாலைகளுக்கு இடையிலான 38 வது தேசிய மட்ட உயரம் பாய்தல் போட்டியில் தேசிய மட்டத்தில் புதிய சாதனையாக 1.56 மீட்டர் பாய்ந்து புதிய சாதனையை நிலை நாட்டி தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
உயரம் பாய்தலில் தேசிய மட்ட சாதனை
கடந்த 2023 ஆம் ஆண்டு உயரம் பாய்தலில் தேசிய மட்ட சாதனையாக 1.55 மீற்றர் உயரத்தை வத்தளை சர்வதேச பாடசாலை ஒன்றின் மாணவி நிலை நாட்டியிருந்தார். இந்த சாதனையே முறியடிக்கப்பட்டது.

தேசிய சாதனை படைத்த மாணவியை கௌரவிக்கும் நோக்கில் இன்று (6) பாடசாலை சமூகம் மற்றும் கிராம மக்கள் மாணவியை மன்னார் நுழைவுப் பாலத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தூரம் வாகன பவனியாக பேசாலை வரை வரவேற்று பேசாலை பிரதான சந்தியில் இருந்து பான்ட் வாத்தியம் மற்றும் நாட்டுப்புற நடன நிகழ்வுடன் வரவேற்று பாடசாலை அரங்கில் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.
கௌரவிக்கப்பட்ட மாணவி
பாடசாலை அதிபர் மெரின் சோசை நெல்சன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர் உட்பட ஆசிரியர்கள்,மாணவர்கள்,மற்றும் பேசாலை கிராம மக்கள் , பேசாலை புனித வெற்றி நாயகி அன்னை ஆலயத்தின் பங்குத் தந்தையர்கள், அருட் சகோதரிகள் கூட்டாக இணைந்து சாதனை மாணவி, அவரது பெற்றோரையும் கௌரவித்து பொன்னாடை போர்த்தி மலர் மாலை அணிவித்து அன்பளிப்புகளை வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


