மணியம் தோட்டத்தில் புதைக்கப்பட்ட தமிழர்களின் உடல்கள்! சந்திரிக்கா தொடர்பில் அதிர்ச்சி வாக்குமூலம்
யாழ்ப்பாணத்தில் செம்மணி மாத்திரமன்றி பலசேனா தலைமையகம் முதல் 1996ஆம் ஆண்டளவில் யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட்டிருந்த முகாம்களில் சித்திரவதைக்கூடங்கள் நடாத்திச்செல்லப்பட்டமையை அன்றைய பாதுகாப்புச்செயலாளர் தொடக்கம் சந்திரிக்கா (Chandrika) வரை அறிந்திருந்ததாக சோமரத்ன ராஜபக்ச (Somaratne Rajapakse) தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அண்மையில் கண்டறியப்பட்டு, அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்ட செம்மணி சித்துபாத்தி மனிதப்புதைகுழியில் 141 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்த நிலையில், 1996களில் செம்மணி முகாம் - துண்டி முகாம் வரை இடம்பெற்ற கைதுகள், படுகொலைகள் மற்றும் சடலங்கள் புதைக்கப்பட்ட இடங்கள் தொடர்பில் கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளியாக நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்ட மரணதண்டனைக் கைதியான சோமரத்ன ராஜபக்ச முக்கிய வெளிப்படுத்தல்களைச் செய்துள்ளார்.
மனித உரிமைகள் ஆணைக்குழு
அவர் தெரிவித்த விடயங்களாக , ”1998 ஆம் ஆண்டு எனக்கு மரணதண்டனைத் தீர்ப்பு விதிக்கப்பட்டதன் பின்னர் எனது கூற்று தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே ஊடாக சிறைச்சாலை அதிகாரியான நாமல் பண்டார என்ற அதிகாரி மூலம் எனக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தார்.
அக்கடிதம் அமைச்சராலேயே எழுதப்பட்டிருந்தது. நான் மேல் நீதிமன்றத்தில் கூறிய விடயம் கோபத்தில் கூறப்பட்டது எனவும், அதனை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
நான் அந்தக் கடிதத்தை வாசித்ததன் பின்னர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் அதனைக் கையளிப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டபோது அந்த அதிகாரி, கடிதத்தை வாசித்துவிட்டுத் திருப்பித்தாருங்கள் என்றார்.
நான் அந்தக் கடிதத்தைத் திருப்பிக்கொடுப்பதற்கு மறுத்தபோது அவர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் என்னை மிலேச்சத்தனமாகத் தாக்கிக் கொல்ல முற்பட்டனர். இருப்பினும் அங்கிருந்த ஏனைய சிறைக்கைதிகளின் தலையீட்டால் அம்முயற்சி தோல்வியடைந்தது.
அவ்வதிகாரிகளுக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழு வழக்குத்தொடர்ந்திருந்த போதிலும், அதற்கு என்ன நேர்ந்தது என்று எனக்குத் தெரியவில்லை.
சோதனைச்சாவடிகளில் கைது
யாழ்ப்பாணத்தில் செம்மணி மாத்திரமன்றி பலசேனா தலைமையகம் முதல் 1996 ஆம் ஆண்டளவில் யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட்டிருந்த முகாம்களில் சித்திரவதைக்கூடங்கள் நடாத்திச்செல்லப்பட்டமையை அன்றைய பாதுகாப்புச்செயலாளர் தொடக்கம் சந்திரிக்கா வரை அறிந்திருந்தனர் என்பதை நான் யாழ் மக்களுக்கு மிகுந்த வருத்தத்துடன் தெரியப்படுத்துகிறேன்.
அரியாலை 7ஆவது இலங்கை இராணுவக் காலாட்படையினால் செம்மணி முதல் துண்டி முகாம் வரை சகல சோதனைச்சாவடிகளிலும் மக்கள் கைதுசெய்யப்பட்டதுடன் சி3 முகாமின் 7 ஆவது இராணுவக் காலாட்படைக்கு உரிய சித்திரவதைக்கூடங்களில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் மணியம் தோட்டம் என அறியப்படும் பிரதேசத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டு, அங்கு புதைக்கப்பட்டன.
அது இராணுவக்கட்டுப்பாட்டின்கீழ் இருந்த பகுதிகளுக்கு வெளியே இருந்த பிரதேசமாகும். அவ்வாறு சடலங்கள் புதைக்கப்பட்ட இடங்கள் எனக்கு சரியாகத் தெரியாவிட்டாலும், அந்தப் பிரதேசம் (மணியம் தோட்டம்) எனக்கு நன்றாகத் தெரியும் என்பதை நான் உங்களுக்குக் கூறுகிறேன்.
இதற்கு மேலதிகமாக பிரதான கைதுகள் செம்மணியில் இடம்பெற்றதுடன், அங்கு கைதுசெய்யப்படமுடியாதவர்கள் ஏனைய சோதனைச்சாவடிகளில் கைதுசெய்யப்பட்டனர்.“ என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 மணி நேரம் முன்
