காணி, காவல்துறை அதிகாரம் வழங்க முடியாது : நாமல் திட்டவட்டம்
சிறிலங்கா அரசியல் அமைப்பின் 13 ஆம் திருத்தச் சட்டத்தின் கீழ் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை வழங்குவதற்கு பொதுஜன பெரமுன எதிர்ப்பை வெளியிடுவதாக நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இந்த விடயத்தை தெற்கைப் போன்றே வடக்கிலும் சென்று கூறி வருகிறேன். சில தரப்பினரைப் போன்று வடக்கில் ஒன்றையும் தெற்கில் ஒன்றையும் நாங்கள் பேசப் போவதில்லை.
நாடாளுமன்ற உறுப்பினரை உருவாக்குதல்
இதனால் வடக்கின் சில அரசியல் கட்சிகளினால் எம்முடன் இணைந்து செயற்பட முடியவில்லை. வடக்கின் ஒரு தொகுதி இளைஞர்கள் தற்பொழுது காணி, காவல்துறை அதிகாரம் என்ற கோரிக்கையை கைவிட்டுள்ள நிலையில், தமிழ் முஸ்லிம் இளைஞர்கள் தற்பொழுது எங்களுடன் இணைந்து கொண்டுள்ளனர்.
எதிர்வரும் தேர்தல்களில் வடக்கினை பிரதிநிதித்துவம் செய்து சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை உருவாக்குவது எமது இலக்கு.
பிரதான எதிராளி சஜித்
அவ்வாறு தெரிவாகும் நாடாளுமன்ற உறுப்பினர் அமைச்சரவையிலும் அங்கம் வகிக்கலாம், ஒரு காலத்தில் அவர் பிரதமராகவோ ஜனாதிபதியாகவோ கூட பதவி வகிக்கலாம்.
இதேவேளை, சிறிலங்கா பொதுஜன முன்னணியின் பிரதான எதிராளி ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவே (Sajith Premadasa) ஆவார்.
அத்துடன் எமது கட்சியிலிருந்து விலகி வெளியேறியவர்களை பிரதான சவாலாகவோ எதிராடிகளாகவோ கருதவில்லை“ என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |