யாழில் இரண்டு மாணவிகள் மீது ஆசிரியை தாக்குதல் : பெற்றோர் குற்றசாட்டு
யாழில் தற்காலிக ஆசிரியை ஒருவர் தாக்குதல் நடத்தியதில் இரண்டு மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வலிகாமம் குப்பிளான் பகுதியில் தரம் நான்கில் கல்வி கற்கும் மாணவிகள் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருகையில், குறித்த பாடசாலையில் தரம் நான்கு வகுப்பில் 15 பேர் கல்வி கற்று வருகின்ற நிலையில் வகுப்பு ஆசிரியர் ஐந்து மாணவர்களை மாத்திரம் கற்பித்து கொண்டு ஏனைய 10 மாணவர்களை கற்பிப்பதற்கு க.பொ.த உயர்தர பரீட்சை நிறைவடைந்த 20 வயதான யுவதி ஒருவரை 10000 ரூபாய் சம்பளத்திற்கு பணிக்கு அமர்த்தியுள்ளார்.
குறைவான புள்ளி
இந்த நிலையில், மாணவிகள் இருவர் பரீட்சையில் குறைவான புள்ளி எடுத்ததன் காரணமாக அவர்களை தடியால் சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதனையடுத்து குறித்த இரு மாணவிகளின் பெற்றோரும் அதிபருடன் முரண்பட்ட நிலையில், ஒரு பிள்ளையின் பெற்றோர் தனது முகநூலில் புகைப்படமாக பதிவேற்றியுள்ளார்.
மேலதிக பிரச்சினை
இதனை தொடர்ந்து அதிபர் பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோரை அழைத்து இவ்வாறு பதிவிட்டால் மேலதிக பிரச்சினைகள் எழும் எனவும் குறித்த தற்காலிக ஆசிரியையினை வெளியேற்றியுள்ளதாகவும் பொறுப்பாசிரியர் மீது கல்வி திணைக்கள நடவடிக்கை மேற்கொள்ளபடும் என்றும் தெரிவித்ததாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து வலிகாமம் வலய கல்வி பணிப்பாளரை எமது பிராந்திய செய்தியாளர் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது இரண்டு மாணவர்களும் வகுப்பில் முரண்பட்டு காயம் ஏற்பட்டதாகவும் மற்றும் எதிர்வரும் திங்கட்கிழமையே விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கபடுகின்ற பொழுது சம்பவம் குறித்த முழுமையான விடயம் தெரியவரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் மாணவர்களிடையே முரண்பாடு ஏற்படவில்லை என பெற்றோர் நிராகரித்துள்ள இதேவேளை ஏனைய மாணவிகளும் தாக்குதலுக்குள்ளானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |